Sunday, August 06, 2017

இஸ்லாத்தில் மனித உரிமைகள்


இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  இந்த நாள் புனிதமானது போல் ஒவ்வொரு மனிதனின் உயிரும் உடமையும் புனிதமானது
குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது :
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. (5:8)
மனித இரத்தம் புனிதமானது. எந்நிலையிலும் அதனை அநியாயமாக சிந்தக் கூடாது. இந்தச் சட்டத்தை மீறி ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்பவர் மனிதகுலம் முழுவதையும் கொலை செய்தவரைப் போன்றவராவார்.
குர்ஆன் கூறுகிறது :
பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே கொன்றவர் போன்றவராவார். (5:32)
பெண்கள், மழலைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், காயமடைந்தோர் ஆகியோரைக் கொடுமைப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எல்லா சூழலிலும் பெண்களின் கற்பும், கண்ணியமும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் வறியவர்கள், காயமடைந்தோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
எவர்கள் அல்லாஹ் அருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள் தாம் நிராகரிப்பாளர்கள். (5:44)
இஸ்லாமிய அரசில் மனித உரிமைகள்
உயிர் மற்றும் உடமைப் பாதுகாப்பு :
இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரைப் பறிக்கக் கூடாது.
முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.
மனித மாண்பின் பாதுகாப்பு :
குர்ஆன் கூறுகிறது :
ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்யாதீர்கள்
அவதூறு கற்பிக்காதீர்
பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்
புறங்கூறாதீர், தரக் குறைவாகப் பேசாதீர்
தனிநபர் வாழ்வும் புனிதமும் :
உளவு பார்க்காதீர்
உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழையாதீர்
தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்பு :
வேரொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது :
ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். (6:164)
வாழ்வாதார அடிப்படைக்காக உரிமை :
தேவையள்ளோருக்கும் வறியோருக்கும், உரிய உரிமைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. அவர்களுக்கு உரிய நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
இறைவன் கட்டளையிடுகிறான் :
அவர்களின் சொத்தில் வறியவர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உரிமையுண்டு. (70:15)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் :
சட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களுக்கும் பரிபூரண முழுமையான உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.
ஆட்சியாளர் விதிவிலக்கல்ல :
ஓர் உயர்ந்த வம்சத்துப் பெண் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாள். அந்த வழக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப்பட்டது. திருட்டுக் குற்றத்திலிருந்து அவளை விடுவிக்க வேண்டும். தண்டிக்கக் கூடாது என்று சிலர் பரிந்துரை செய்தனர். அப்பொழுது முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர், சாமானியர்கள் தவறு செய்தால் தண்டிப்பார்கள். மேட்டுக் குடி மக்கள் அதே தவறைச் செய்தால் தப்பிக்க விடுவார்கள். என் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ, அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மதின் மகள் ஃபாத்திமா இதே தவறைச் செய்தாலும் நான் அவர் கையைத் துண்டிக்காமல் விட மாட்டேன்.


No comments: