Sunday, March 12, 2006

தேவை மனமாற்றமா? மதமாற்றமா?

எந்த ஒரு இஸமானாலும் மதமானாலும் அதனுடைய கொள்கையும் கோட்பாடும் குறைந்த பட்சம்

1. பிறரின் தன்மானத்தைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது.
2. மனித சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

இவை இரண்டும் இல்லாத எந்த ஒரு இஸமும் மதமும் காலச் சுழல் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். அல்லது அதன் கூடாரம் சிறுகச் சிறுக காலியாகிவிடும்.

என் அருமை நண்பனின் தன்மானம் பறிக்கப்பட்ட நிகழ்வுகள், பல ஆண்டுகளாய் என் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி, மறக்க முயன்றும் முடியாததாகவே பதிந்து விட்டது.
அதை இங்குப் பதிவதற்கு முன்னர் ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இரண்டு நண்பர்கள் ஒரே இடத்திற்குப் போவதற்குப் பேருந்திற்காக காத்து நின்றனர். பேருந்தும் வந்தது. நண்பருள் ஒருவர் ஏறிவிட்டார். மற்றொருவர் ஏறுமுன்னரே பேருந்து நகர்ந்து விட்டது. பேருந்தில் ஏறிய நண்பரால் அந்த பயணத்தை நிம்மதியாகத் தொடர முடியுமா? மனிதனையும் மனித நேயத்தையும் நட்பின் ஆழத்தையும் உணர்ந்து நேசிக்கின்ற எந்த ஒரு மனிதனாலும் நிச்சயமாக முடியாது. அப்படிப்பட்டவன் ஒன்று அந்த பேருந்திலிருந்து இறங்கிவிடுவார். அல்லது பேருந்தை நிறுத்தி விடுவார். இதுதான் உண்மையான நேசத்தை வெளிப்படுத்தும் நல்ல மனதின், உறுதியான நட்பின் நிலைபாடாகும்.

ஆனால், பேருத்தில் ஏறிக்கொண்ட நண்பன் பயணத்தைத் தொடர்ந்தானேயானால் பேருந்தைத் தவற விட்ட நண்பனின் உள்ளம் எவ்வளவு பரிதவிக்கும்? அந்தப் பரிதவிப்பை வெறும் ஏட்டில் எழுதி உணர வைக்க முடியுமா?

சுனாமியின் பாதிப்பை கேஸட்டிலும் டெலிவிஷனிலும் பார்ப்பவர்களுக்கு , அதனுடைய பாதிப்பின் ஆழத்தை உணரமுடியாது. அதில் நேரடியாக அகப்பட்டவனுக்குத்தான் அந்த பாதிப்பின் சுயரூபத்தையும், தாக்கத்தையும், வீச்சையும் உணரமுடியும்.

அதுபோலவே, ஜாதி என்னும் கொடுங்கோலனின் ஆட்சியில் அகப்பட்டுத் தன் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டவனுக்குத்தான் அதன் கொடுமையின் கடுமை தெரியும்.

இனி, விஷயத்துக்கு வருகிறேன்.

என் மனது சொல்லமுடியாத அளவுக்கு வேதனைப்பட்டதும் இன்னும் வேதனைப்படுவதும் என்னுடைய சிறுவயது பள்ளி வாழ்க்கையில், அந்தப் பிஞ்சு மனதில் ஏற்பட்ட கலக்கங்களினால். அப்போது அதை எதிர்த்து நிற்கவும் முடியாது; அதற்கான மாற்று வழி தேடவும் தெரியாது. அந்நிகழ்வு பசுமரத்தாணி போல் என் மனதில் பதிந்து விட்ட வடு. நான் நட்பைப் பெரிதாக மதிப்பதால்தான் என்னால் அந்த வேதனையை உள்ளது உள்ளபடி உணர முடிகிறதோ என்னவோ?

பள்ளிகளில் நிச்சயமாக ஜாதியம் போதிக்கப்படுவதில்லை. ஆனால் பள்ளிக்கு வெளியில் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அது குடிகொண்டு ஆட்சி செலுத்துகிறது. என்னுடைய பள்ளி நண்பர்கள் அனைவரும் ஆதி திராவிடர்கள்தாம். அவர்களோடு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருடனும் நான் மிக நெருக்கமாகவே பழகினேன். நட்பை, உலகில் உயர்ந்த ஒன்றாகக் கண்டேன். அதனால்தான் நட்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்த ஒரு சம்பவத்தையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது எழுத்துக்காக கற்பனையில் சொல்வதன்று; என்னுடைய வாழ்க்கையில் பிஞ்சு மனதில் பதிந்த, கருத்த நிழற்படங்கள்.

அதனால்தான் அந்தச் சம்பவங்களை என் மனதிலிருந்து மாற்றவோ மறைக்கவோ முடியாமல் போனது. அதற்கான மாற்று என்ன எனத் தேடவும் தூண்டியது.

நானும் என் நண்பர்களும் பள்ளியறையில் ஒரே பெஞ்சில்தான் அமர்ந்திருப்போம். காலையில் இடைவேளயின் போது ஐந்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி, சட்டைக்குள் வைத்து (காக்கை கடி) கடித்து எல்லா நண்பர்களும் பகிர்ந்து கொள்வோம். மதிய உணவும் மரத்தடியின் கீழமர்ந்து பகிர்ந்தே உண்போம். காலையிலிருந்து மாலைவரை கிட்டத்தட்ட ஒன்பதரை மணிநேரம் ஒன்றாகவே பள்ளியில் இருப்போம். எல்லோரும் ஒன்றாகவே வீட்டிற்கும் திரும்புவோம் . ஆனால் பள்ளியை விட்டு வெளியில் வந்தவுடன் இவன் மேல்ஜாதிகாரன்; அவன் கீழ்ஜாதிக்காரன் எனப் பிரிக்கப்படுவோம்.
நானும் என் ஆதி திராவிட நண்பனும் அருகிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிடப் போவோம். எனக்கு மட்டும் உள்ளே நுழைய அனுமதி தரப்படும். எனதருமை நண்பன் வெளியே நிறுத்தப்படுவான்.

கடைக்குப் போவோம். எனக்கென்று தனி ஒரு உபசரிப்பு; அவனுக்கென்று வேறு மாதிரி உபசரிப்பு.

என் வீட்டிற்கு இரவு நேரங்களில் புத்தகங்கள் வாங்குவதற்கு என் நண்பன் வருவான். விடிந்தால் பள்ளியில் என்னுடன் ஒட்டி உறவாடி ஓடியாடி விளையாடக்கூடிய என்னுயிர் நண்பன், எங்கள் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்படுவான். என் வீட்டிற்கு உள்ளே வருவதும் என்னுடன் வெளிப்படையாகப் பழகுவதும் அவனுக்குத் தடை செய்யப் பட்டதாகும்.

காரணம் என்ன? அவன் கீழ்ஜாதிக்காரன்; என் வீட்டிற்குள்ளே அவன் வந்தால் சாமி தீட்டாகிவிடும். இப்படி சக மனிதனோடு அவனின் சுயமரியாதையோடு விளையாடக்கூடிய சாமியும் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கின்ற தீய சம்பிரதாயமும் நமக்கு தேவையா?

"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்;
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்


என்றெல்லாம் ஆயிரம் சொல்லிப் பார்த்தார் பாரதியார். ம்ஹூம் ... ஒன்றும் பிரயோஜனமில்லை.

இப்போது நான் கேட்கின்றேன் இங்கு நமக்குத் தேவை மனமாற்றமா? அல்லது மதமாற்றமா?


மனமாற்றம் என்றால் என்ன?
இந்து சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காக நம் அரசாங்கம் பொறி கடலையெல்லாம் கொடுக்கத்தான் செய்கின்றது. ஆனால் சமூகத்தின் மனதை மாற்றமுடிகின்றதா ? அவ்வளவு ஏன்? பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைச் சேர்க்கும் போதுகூட ஜாதியைக் குறிப்பிட்டே தான் சேர்க்கப்படுகின்றனர்.


ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வேறொரு ஊரில் போய் வாழ்ந்தால் பிறப்பினால் ஒட்டிக் கொண்ட ஜாதியைக் கொஞ்ச காலமாவது மறைக்க முடியும். ஆனால் அதுவும் எவ்வளவு காலம் நடக்கும்? மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற இழிநிலை எப்பொழுது தீர்க்கப்படும்? எப்படி தீர்க்கப்படும்?


மதம் மாறினால் மட்டுமே இந்த இழிநிலை உறுதியாகத் தீர்க்கப்படும். !!!