Monday, July 24, 2006

புராணங்களை படித்தும் புரியாதது

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முழுநேர ஊழியர்களாகவும் கால வரையரையுற்ற தொண்டர்களாகவும் பேசி எழுதித்தள்ளிக்கொண்டே இருந்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச்செய்து கொண்டேதான் இருக்கின்றான், அல்ஹம்துலில்லாஹ்.

நிகழும் இந்த காலகட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிராக புனையப்படும் பொய்க் கணைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இவை அனைத்தும் இப்பொழுது நாம் சிந்தித்துத்தான் எழுதுகின்றோம் பேசுகின்றோம் என்ற நினைப்பில்தான் ஒவ்வொரு சிந்தனையாளன் என்ற பெயரில் உள்ள அறிவு சூனியங்களும் உள்ளனர்.

ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தின் வழியே சஞ்சரிக்கும் மனிதர்களுக்கு நன்றாகத் தெரியும் இவையனைத்தும் இஸ்லாத்தின் எதிரிகள் காலாகாலமாக சொல்லிக் கொண்டேயிருக்கும் கூப்பாடுகள்தான் என்று.

இந்த எழுத்துத்துறையில் உள்ள சில இஸ்லாமிய சிந்தனையாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளுக்கு என்னதான் பதில் எழுதினாலும் அவர்கள் அதையேதான் சிக்கிப்போன ஒலித்தட்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இஸ்லாத்தின் எதிரிகள் என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்த சமுதாயத்திற்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது அதுதான் அல்லாஹ் கொடுக்கும் வாக்குறுதி ஆம். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு வாக்குறுதியளிக்கின்றான்.

காஃபிர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். (9:32)

இந்த இறைவசனத்திற்கு சான்றாக இதோ அல்லாஹ்வின் மீண்டும் ஓர் அற்புதத்தைப் பாருங்கள்.

புராணங்களை படித்தும் புரியாதது குர்ஆனைப் படித்து....
அல்லாஹ்வின் கருணையினால் ஆசீர்வதிக்கப்பட்ட முஹம்மது உமர் ராவ் ஆகிய நான் ஒரு இந்தியக் குடிமகன். நான் என்னுடைய 18ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவி இன்றுடன் 6 வருடம் பூர்த்தியாகிவிட்டன. நான் என்னுடைய வாழ்க்கை விபரங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.

முஸ்லிம் அல்லாதவர்களும் இதைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. என்னுடைய வாழ்க்கைமுறையை இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் என்னுடைய தேர்வு மற்றும் முடிவு மிகச் சிறந்தது என்று உற்சாகப்படுத்தினார்கள்.
வாழ்க்கை முறை
நான் நடுத்தர வகுப்பு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை இன்ஜினியாராகவும், தாய் ஆசிரியையாகவும் உள்ளனர். என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்துதான் மதச் சம்பந்தமான கல்வியை நான் கற்றேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் கல்வியும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்ததால் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் என்னுடன் ஆணி அடித்தது போல் இருந்தது.

சில காலம் RSS-ல் சேர்ந்திருந்ததால் நான் எப்பொழுதுமே முஸ்லிம்களை வெறுக்கின்றவனாகவே இருந்து வந்தேன். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் சப்தத்தை அதிகப்படுத்தி அந்த பாங்கு சப்தம் என்னுடைய காதில் விழாதபடி செய்வேன். நகரத்தில் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் தினந்தோறும் சென்று வழிபாடு செய்பவனாக இருந்து வந்தேன், இதற்காக என் வீட்டினர் அனைவரும் என்னை உற்சாகப்படுத்துவார்கள்.
இஸ்லாத்துடன் பரிச்சயம்
ஒரு கோடை விடுமுறையில் ஒரு முஸ்லிமின் வியாபார நிர்வாகத்தில் வேலை செய்யச் சொல்லி என் தாய் என்னை அழைத்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை, ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் இருந்தே முஸ்லிம்களை நான் வெறுத்து வந்தேன். என்னுடைய நிலையை அறிந்த என் தாய் மேற்கொண்டு என்னை வற்புறுத்தவில்லை.
சில கோடை விடுமுறைகளில் முஸ்லிம் அல்லாத வியாபார நிர்வாகத்தில் நான் வேலை செய்து வந்தேன். ஆதலால் என்னுடைய தாய், தந்தை இருவரும் திருப்தி அடைந்தனர். சில காலம் கழிந்து அந்த பகுதிநேர வேலையை விட்டுவிட்டு என்னுடைய படிப்பில் கவனமானேன்.

மேற்கொண்டு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய தாய் மற்றும் தங்கைகள் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் 2 மாதம் தற்காலிகமாக பணியாற்றினார்கள், அந்த 2 மாதத்தில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் எனது தாய் மற்றும் தங்கைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
நான் வெறுக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாராவது பேசினாலே எனக்கு கோபம் வந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்த நான் எனது தாய் மற்றும் தங்கைகளின் நிர்பந்தத்தில் சில முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானேன்.

வேண்டா வெறுப்பாக அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு இன்னும் அதிகமானது. ஏனென்றால், அந்தக் கடையில் வேலை செய்யும் முஸ்லிம் அல்லாதவர் பல பேர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
இஸ்லாத்திற்கு ஏன் அனைவரும் இப்படி முக்கியத்துவம் தருகிறார்கள் என்று எண்ணி என்னுடைய இந்து மதம் தான் சிறந்தது, உயர்ந்தது என்று அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தையும், இஸ்லாத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தருணத்திலிருந்து இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதால் குர்ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆரம்பித்தேன். படித்து அதன் அர்த்தத்தை நல்லபடியாக தெரிந்து யோசிக்க ஆரம்பித்த என்னுடைய மாணவப் பருவ வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது.

அதன் பிறகு நான் என்னென்ன தவறுகள் இதுவரை செய்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதைப்பற்றி கவலை மற்றும் பயம் வந்தது. என்னுடைய இந்து மதம் முழுவதும் கற்பனை மற்றும் புராணங்களாலும், கட்டுக் கதைகளாலும்தான் நிரம்பி உள்ளது என்று தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து பல கேள்விகளும் சந்தேகங்களும் என்னுள் எழுந்தது. என்னுடைய கடமை என்ன? நான் எப்படி இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த உண்மையான கருத்து எங்களில் பல பேருக்கு வந்து சேரவில்லை? இதைப் போல பல கேள்விகளுக்கு உண்மை மற்றும் பதில் தெரிந்து கொள்வதில் என்னுடைய மீதி மாணவப் பருவத்தை செவழிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய பெற்றோர்களையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நான் கேட்டேன், கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா? எந்த அடிப்படையில் படங்களையும், சிலைகளையும் உருவாக்குகிறார்கள்? கடவுளை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் அவர்கள் அனைவரின் பதிலுமாய் இருந்தது. இறுதியில் நான் சில புராணங்களை படித்ததின் மூலம் உண்மையை உணர முடிந்தது. அதன் பிறகு இந்து கடவுள்களின் கதைகள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நான் என் பெற்றோர்களிடம் மீண்டும் கேட்டேன்.

எல்லா இந்து வேதங்களும் சிலை வணக்கங்களை எதிர்க்கின்றன. இருப்பினும் நாம் தொடர்ந்து அதைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஏன்?
எந்த அடிப்படையில் சிலை வணக்கம் செய்கிறோம்.

இந்த கேள்வியால் என் பெற்றோர்கள் என் மேல் கோபப்பட்டு நமது முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததைத்தான் நாம் தொடர்ந்து செய்கிறோம் என்று சொன்னார்கள். இந்த பதிலால் நான் திருப்தியடையவில்லை.
அடுத்து நான் குர்ஆன் படித்தபோது அத்தியாயம் அல்பகராவில் ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" (அல்-குர்ஆன் 2:170)

இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. அதன் பிறகு சிலை வணக்கங்களையும், பூஜைகள் செய்வதையும் சிறிது சிறிதாக நிறுத்தினேன். அல்லாஹ்வுடன் மற்றவர்கள் இணை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்தேன். ஆரம்ப நாட்களில் மிகவும் ரகசியமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.

அல்பகரா அத்தியாயத்தில் அல்லாஹ் மேலும் தெளிவுபடுத்துகின்றான், என்னவென்றால்
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்;, நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.அல் குர்ஆன் 2 :14

அதைத்தொடர்ந்து ஆல இம்ரான் அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குவது என்னவென்றால்

..இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.. (அல் குர்ஆன் 5 : 3)
இதன் பிறகு நான் மேலும் தெளிவடைந்தேன். என் மனதில் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை இந்த குர்ஆனில் மட்டும் தான் கிடைத்தது. அல்லாஹ்வின் கிருபையினால் இஸ்லாத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த மற்றும் அறிந்த சில விபரங்களை நான் என் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினேன்.

டிப்ளமோ கடைசி ஆண்டு படிக்கும் காலத்தில் இஸ்லாத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக நான் மாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் என் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு என்னுடன் வெளியே வந்துவிட்டாள்.
நானும் எனது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். அந்த நேரத்திலும் இஸ்லாத்தில் உள்ள பற்று எங்களுக்குக் குறையாமல் மிகவும் ஈமானுடன் இருந்ததால் அல்லாஹ் எங்களுடைய எல்லா சிரமங்களையும் இலேசாக்கினான், அல்ஹம்துலில்லாஹ்.
மிகவும் குறைந்த வருமானத்தில் கிடைத்த வேலைக்கு நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். இதற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டேன். அல்லாஹ் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் எங்களுக்கு அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்தான்.ஐந்து வேளை தொழ முடியாத காரணத்தால் நான் என்னுடைய முந்தைய வேலையிலிருந்து விடுபட்டேன். கொஞ்ச கொஞ்சமாக பல பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை நான் இழக்கும்படி ஆகிவிட்டது. இதற்காக நான் வருத்தப்பட்டாலும் அல்லாஹ்வின் கருணையினால் தற்போது நல்ல வேலை கிடைத்ததுடன் ஐந்து வேளை நல்லபடியாக தொழுகவும் முடிகிறது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!தொகுப்பு: (ஆங்கிலத்திலிருந்து தமிழில்) : கோவை. பஷீர்