Tuesday, October 25, 2005

அன்றைய கேள்விக்கு இன்றைய பதில்...


இஸ்லாமிய மார்க்கம் இந்த பூவுலகிற்கு இறைவன் அருளிய வரப்பிரசாதம். அது சத்தியத்தை விரும்பக்கூடிய எல்லா உள்ளங்களுக்கும் சாந்தியை பகரக்கூடிய சன்மார்க்கம்.

தன் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில சம்பவங்கள் அதே சமயத்தில் இல்லையென்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு எப்போதாவது அவனுடைய மனதில் பெரும் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய சக்தியாக, திருப்புமுனையாக அது மாறிவிடுகின்றது. ஒருநேரம் இல்லையென்றாலும் ஒருநேரம், அவன் மனத்திரையில் அந்த சம்பவம் ஓடும்பொழுது அதன் ஆழத்தையும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் உள்மனதில் உணர்ந்தவர்கள் அதிலிருந்து விடுதலை பெற துடிப்பார்கள். குறைந்த பட்சம் அதற்குறிய வழியையாவது தேடுவார்கள். அதை உணராதவர்களுக்கு வேண்டுமானால் அதுஒரு கனவாக நின்றுவிடும்.

மனிதன் சிந்தித்து சுய உணர்வு பெற்று தன்னுடைய வல்லமையையும் தன் மீதுள்ள கடமையையும், இறைவனின் வல்லமையையும் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையையும் உணர்ந்து இந்த பூமியில் சுயமரியாதை மிக்கவனாக அல்லாஹ் நம் கண்முன்னே இந்த பூமியில் கொட்டி வைத்திருக்கும் அத்தாட்சிகளுக்கு சாட்சி பகரவேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் மனிதனுக்கு அறிவை கொடுத்தான். ஆனால், அந்த மனிதனோ இறைவனின் பெயராலேயே அதே அறிவைக்கொண்டு தன்னுடன் வாழும் சகமனிதனை இழிவு படுத்துகின்றான் அல்லது இழிவாக கருதுகின்றான்.
நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் அறிவை தீண்டாமையிலிருந்தும், மூடநம்பிக்கையிலிருந்தும் சிந்திக்கத்தூண்டிய ஒரு சில சம்பவங்களை அல்லாஹ்விற்காக உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோசமடைகின்றேன்.

சிந்திக்கத் தூண்டிய சம்பவம்
நான் பழனிமலை முருகன் கோவிலுக்கு ஐந்து முறை நடந்தும் இரண்டு முறை பேருந்திலும் ஆக ஏழு முறை சென்றிருக்கின்றேன். நான் கடைசி முறையாக முருகன் கோவிலுக்கு மாலை போட்டு இருக்கும்பொழுது ஒன்பதாம் வகுப்பின் கடைசி பரிட்சை வந்ததால் நடந்து செல்பவர்களோடு என்னால் போக இயலவில்லை அதனால் என்னை பேருந்தில்

வரச்சொன்னார்கள். பிறகு நாங்கள் நடைபயணம் செல்லக்கூடியவர்களை எங்கள் ஊரிலிருந்து ஒவ்வொரு வருடமும் பயணம் அனுப்புவோம். இது வழக்கமாகும்.

எங்கள் ஊரில் உள்ள பெரிய கோவில் ஒன்றில் பயணமனுப்பும் சடங்கு நடந்தது பழனி மலைக்கு செல்லக்கூடிய குரூப்பில் கீழ்ஜாதி மேல்ஜாதி மக்கள் என அனைவரும் இருப்பார்கள். பயணம் செல்லக்கூடிய எல்லா "சாமி"களையும் எங்கள் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று வழியனுப்புவது வழக்கம். ஒரு சிலரைத் தவிர பாக்கி நின்றவர்கள் அனைவரின் காலிலும் எல்லோரும் விழுந்தனர். ஆசிர்வாதமும் பெற்றனர். ஆனால் நான் அங்கு நின்றவர்கள் அனைவரின் காலிலும் சகட்டுமேனிக்கு விழுந்து கும்பிட்டேன். ஆனால் இந்த சம்பவம் என் குடும்பத்திலும் மற்றும் எங்கள் ஊர் மேல்ஜாதி பிரமுகர்கள் அனைவரின் மனதிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. பிறகு என்னை அழைத்து "நீயோ மேல்ஜாதிகாரன், நீ போய் எப்படி கீழ்ஜாதிகாரனின் காலில் விழுவது இது கேவலம்! நம் ஜாதிக்கே பெருத்த அவமானம்!" என்றெல்லாம் ஏசினார்கள். அவர்கள் அப்படி கோபப்பட்டதற்கும் காரணம் உள்ளது. ஏனென்றால் எங்கள் ஊரைப் பொருத்தவரை தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு தான் உயர் மட்டத்தில் அல்லது பொருளாதார உயர்வில் இருந்தாலும் அவர்களை தாழ்ந்தவர்களாகவும் அடிமைகளாகவுமே கருதுவார்கள்.

"உங்களைப் போலவே அவரும் பழனி முருகனுக்கென்று மாலை அணிந்து கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து உங்களுடனே கால்நடையாக நடந்தும் வருகின்றார்கள். நீங்களும் அவரும் ஒரே இறைவனை வணங்க ஒரே முறையில் ஒரே நாளில் ஒரே இடத்திற்கே ஒரே நோக்கத்தோடு செல்கின்றீர்கள். இருந்தும் ஏன் அவர்களும் நம்போன்ற மனிதர்களே அல்லது நாம் வணங்க போகின்ற அதே இறைவனைத்தானே அவரும் வணங்க வருகின்றார்கள் என்பதை உங்கள் மனம் ஏன் ஏற்க மறுக்கின்றது?" என்று நான் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அனைவரும் யாத்திரை புறப்பட்டு சென்றுவிட்டனர் பிறகு என் பாட்டி என்னை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்று இரவு முழுதும் எனக்கு தூக்கமேயில்லை என் மனதுக்குள் நான் என்ன தவறு செய்தேன் என்ற ஒரே ஒரு கேள்வி பாக்கியாகவே நின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த இந்த சம்பவத்தை என் ஆசிரியரிடம் கூறினேன் அவர் சிறிது நேரம் மௌணமாக இருந்துவிட்டு நெல் சலிக்கும் சல்லடையை காண்பித்து இதோ பார் தம்பி இந்துமதம் இந்த சல்லடையைப் போன்று பல ஓட்டைகளைக் கொண்டது அதில் ஒரு ஓட்டையைத்தான் நீ இப்பொழுது பார்த்திருக்கின்றாய் இதுபோல் இன்னும் பல ஓட்டைகள் உள்ளது என்று கூறினார்.
அப்பொழுது என் மனம் சமாதானம் அடைந்தது இன்னும் பல கேள்விகளை கேட்பதற்காக....!!
அன்றைய கேள்விக்கு இன்றுய பதில்... 4:1.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்…….!!

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்க மேலானவர். (அல்குர்ஆன் 49:13)

உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது என்கிறது. இந்த இறைவசனம்

மனித இனம் ஒரே இனமாக இருந்த போதிலும் நீங்கள் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து இருப்பது ஓர் இயற்கையான விஷயமாகும். மனித இனம் பெருகப்பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும் பின் பல பாகங்களுக்கு அவை குடிபெயரும்போது பல கிளைகளும் பல கோத்திரங்களும் உருவாகுவதும் தவிர்க்க முடியாததாகும். மனிதன் பூமியின் பல பகுதிகளில் வசிக்கத் துவங்கிய பின்னர் உடல் அமைப்பு நிறம் மொழி நடைஉடை பாவனைகள் வாழ்க்கை முறைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டேயாக வேண்டியிருந்தது ஒரே பகுதியில் வசிப்போர் ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாகவும் வெகுதொலைவில் வசிப்போர் நெருக்க மற்றவர்களாகவும் இருக்க வேண்டிய நிலை வந்தது

ஆனால் இந்த இயல்பான வேற்றுமை நம்மிடம் இருப்பதால் இவ்வேற்றுமையின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஆண்டான் அடிமை மேலோன் கீழோன் எனும் பாகுபாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது அறிவீனர்களின் கருத்தாகும்
இறைத்தூதர் அவர்கள் நிகழ்த்திய உரையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இறுதி உரையில் கூறினார்கள்:

மானிடரே! நிச்சயமாக உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து தான் இறைவன் படைத்தான் மனித சமுதாயம் அனைத்தும் ஆதமுடைய சந்ததிகளே! ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர் எனவே பிறப்பு சொத்து ஆகியவற்றால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். நிறம் இல்லை. ஒர் அரபி அரபி அல்லாத ஒருவனை விட உயர்ந்தவன் அல்லன். அரபி அல்லாத ஒருவன் ஒர் அரபியை விட உயர்ந்தவன் அல்லன்.
ஒரு வெள்ளையன் ஒரு கருப்பனை விட உயர்ந்தவன் அல்ல ஒரு கருப்பன் ஒரு வெள்ளையனை விட உயர்ந்தவன் அல்ல
மனிதர்களுக்குள்ள உயர்வெல்லாம் அவனின் இறை பக்தியைப் பொறுத்தே அமைந்திருக்கிறது''.
மக்காவை வெற்றி கொண்டபோது நபி(ஸல்) ஆற்றிய சொற்பொழிவில் கூறுகிறார்கள்:
உங்களிடமிருந்து அறியாமைக் காலத்தின் குறைகளையும் அதன் வீண் பெருமைகளையும் போக்கிவிட்ட இறைவனைத் துதித்து நன்றி செலுத்துகிறேன்.
மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராக பிரிகின்றார்கள். ஒருவர் நல்லவர் இறையச்சம் உள்ளவர். அவரே இறைவனின் பார்வையில் கண்ணியம் மிக்கவர். மற்றொருவன் தீயவன் துர்பாக்கியவான். அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன். மனிதர் அனைவரும் ஆதமின் மக்களே ஆவர். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான். (நூல்: பைஹகீ திர்மிதி)

திருக்குர்ஆனின் பிரகடனமும் திருத்தூதரின் போதனையும் வெறும் தத்துவங்களாக இருந்துவிட்டு மாய்ந்து போகவில்லை.அன்றைய அரபு சமுதாயத்தில் தலைவிரித்தாடிய குலபேதம் நிறபேதம் வர்க்க பேதம் முதலான பீடைகளை அடியோடு கிள்ளியெறிந்து தீயபண்புகளை விட்டு மிகவும் தூய்மையான பண்பட்ட ஒரே சமுதாயத்தை இம்மண்ணுலகில் உருவாக்கிக் காட்டியது இஸ்லாம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் சான்றோர்களின் வாக்கை மெய்ப்படுத்தி அதை நடைமுறைப்படுத்தியது இஸ்லாம். ஏகத்துவத்தின் வருகை நாடு தழுவியதொரு புரட்சியாகவும் அதன்பின் உலகப்புரட்சியாகவும் மாறியது

ஏகதெய்வ நம்பிக்கை அந்த நாட்டில் நிலவிய சட்டத்தை மட்டுமோ அல்லது அங்கிருந்த ஒரு சில தலைவர்களை மட்டுமோ மாற்றிடவில்லை தனி மனிதர்களை அது தனித்தனியாகவும் சமுதாயத்தை ஒட்டு மொத்தமாகவும் மாற்றியமைத்தது.
அன்று எனக்கு மூடநம்பிக்கையின் வாசலில் நின்று எழுந்த அந்த கேள்விக்கு இஸ்லாத்தில் என்றோ உள்ள பதிலை அறியக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் இன்று தந்துள்ளான். அல்ஹ்ம்துலில்லாஹி ரப்பில் ஆலமின்...
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..!
வல்ல ரஹ்மான் நாம் நாடிய காரியங்களை நல்வழியில் நடத்துவானாக..