இந்தக் காலத்தில் நல்ல பொருள் வளம் இருந்தால் மட்டுமே நண்பன் என்பது எழுதாத சட்டமாகவே மாறிவிட்டது. "உற்ற நண்பனை ஓட்டலில் பில் கொடுக்கும்போது கண்டு கொள்ளலாம்" என்று எப்பொழுதோ படித்த ஞாபகம் உள்ளது.
நல்ல நண்பன் முகம் பார்க்கும் கண்ணாடிக்குச் சமம் என்பார்கள். " ஒரு மனிதனை நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ மாற்றுவது அவனது நண்பர்களும் சூழ்நிலையும்" என்பார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. நல்ல நண்பனைப் பெற்றவன் நிச்சயமாக வழிகெடுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் உண்மை.
நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: " மனிதன், தன் உற்ற நண்பனின் வழி எதுவோ அதன் படி நடக்கிறான்" நூல் : திர்மிதி, அபூதாவூத்
நண்பன் என்பவன் எந்த நேரத்திலும் துணையாக நிற்பவன். சந்தோஷம் வரும்பொழுது கும்மாளம் அடிப்பவனும் கஷ்டம் வந்துவிட்டால் விட்டு ஓடிவிடுபவனும் நிச்சயமாக நண்பனல்லன்; அவன் சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதி என்பதை விட ஒட்டுண்ணி என்பதே பொருத்தமான பெயர் என நினைக்கின்றேன்.
இஸ்லாம் எனக்குக் கிடைத்த பாக்கியமாக நான் கருதுவதற்குக் காரணமான சில சம்பவங்களையும் இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு மனிதன் தன் தாய் மதத்தை விட்டு வேறொரு மதத்தைத் தேர்ந்தெடுக்கின்றான் என்றால் அதைச் சிறிய விஷயமாக யாரும் எடைபோடக்கூடாது. ஏனெனில் அவன் இதுவரை பழகிவந்த பழக்கவழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், கலாச்சாரம் ஏன் அன்றாடம் இன்றியமையாத் தேவைகளைக் கூட மாற்றிக் கொள்வதற்கு அவன் தன்னைத் தயார் செய்து கொள்கின்றான். ஏனெனில் அவன் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழி, அவனை அவ்வாறு மாற்றி அமைக்கிறது.
இதில் இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்: ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு ஒரு மனிதன் மாற்றுகின்றான் என்றால் அந்த வரவை இன்முகத்தோடு வரவேற்கக்கூடிய சமுதாயமாக அல்லது அவனையும் அவனுடைய முடிவையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மக்களாக அவர்கள் இருக்கவேண்டும். இஸ்லாத்தின் வெற்றியும் இதுவே என்றே நான் நினைக்கின்றேன்.
இஸ்லாம் மறுமை நம்பிக்கையை மையமாக வைத்து மாந்தர்கள் தமது வாழ்வை அமைத்துக்கொள்ளச் சொல்கின்றது. மறுமை நம்பிக்கை என்பது 'நாளை மரணத்திற்கு பிறகு மீண்டும் நான் எழுப்பப்படுவேன்; பூவுலகில் என்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டிருந்தேன் என்பதைப் பற்றி விசாரிக்கப்படுவேன்' என்பதாகும். இந்த நம்பிக்கை ஒரு மனிதனுடைய மனதில் ஆழமாக இல்லையெனில் அவன் தன்னை முஸ்லிமென்று சொல்லிக் கொள்வதில் எந்த பலனுமில்லை என்கின்றது இஸ்லாம்.
'நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அது உனக்கு நல்லது நீ அதை புறக்கணித்து வாழ்ந்தால் அது உனக்குத்தான் கேடு' என்ற கருத்தில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. உலகாதாயத்தை எதிர்பார்த்துத் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு இஸ்லாம் சொல்லவுமில்லை. அதை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதும் இவ்வடிப்படையில் அமைதல் நலம் பயக்கும் .
நபித்தோழர் குபைப் இப்னு அதிஃ(ரலி ) அவர்களைக் கைதியாகச் சிறை பிடித்து, அவரைச் சிலுவையில் அறைந்து, அம்புகளாலும் கத்தியாலும் வெட்டிச் சித்ரவதை செய்து அவரைக் கொல்லத் தீர்மானித்த பின்னர், " உன்னுடைய இந்த இடத்தில் உனது தோழர் முஹம்மதை வைத்து விட்டு , அதற்குப் பதிலாக நீ விடுதலை அடைந்து உனது குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்க விரும்புகின்றாயா"? என்று அபுசுப்யான் கேட்டார்.
அதற்கு "இறைவன் மீது சத்தியமாக! எங்களது ஆருயிர்த் தோழர் முஹம்மது (ஸல்) அவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு நான் என்னுடைய குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருப்பதா? அவரது காலில் ஒரு சிறு முள் குத்தக்கூட நான் அனுமதிக்க மாட்டேன்" என்று குபைப் இப்னு அதிஃ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த பதிலால் கொதிப்பேறிய அபுசுப்யான், தன் கையில் இருந்த ஆயுதத்தை வானத்தை நோக்கித் தூக்கி எறிந்தவராக, "முஹம்மதை, முஹம்மதின் தோழர்கள் நேசிப்பது போன்றதொரு நேசத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை", என்று கூவினார் .
இதுதான் நேசத்தையும் நேசத்தை நேசிப்பவர்களின் உள்மனதையும் ஒருங்கிணைப்பதற்கு இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் அறிவுரையாகும்.
இங்கு நான் என் மனதை பாதித்த ஒரு நட்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஜாதி என்ற அந்த வெறி, மமதை ஒரு மனிதனை எப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது. "ஜாதி என்பது மனிதனோடு ஒட்டிப்பிறந்தது அதை பூமியில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் நாம் எந்தக்குலத்தில் பிறக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டே பிறக்கின்றது" என நம்புகின்றான் இந்த படித்த மடையன்.
முதலில் நட்பைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.
தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்திய சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.
ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சான்று பகர்தலின் மூலம் இஸ்லாம் மனிதர்களைச் சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.
விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)
இறை நம்பிக்கை கொண்ட சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது. இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் 'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவை:
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது,
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும். '' (ஸஹீஹுல் புகாரி , ஸஹீஹ்முஸ்லிம்)
அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.
இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப் பற்றிநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1. நீதமான அரசன்
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்
3. இதயத்தால் இறையில்லத்துடன் இணைந்திருக்கும் மனிதர்
4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே இணைந்தனர்; பின் அல்லாஹ்வுக்காகவே பிரிந்தனர்.
5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள் அவர் ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் '' என்று கூறி (மறுத்து) விட்டார்.
6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர்
7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய கௌரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே ? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன். '' (ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு முஸ்லிம், தன் நண்பனை இந்த அடிப்படையில்தான் உருவாக்கவேண்டும். அதை விட்டு உலக ஆதாயத்துக்காக நண்பர்களைத் தேடினால் அந்நட்பு நிலைக்காதது மட்டுமின்றி அந்த நட்பு நண்பன் என்ற உறவுக்கு செய்யும் துரோகமாக இஸ்லாம் கருதுகின்றது. நான் சொன்ன இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு கீழே உள்ள இந்த சம்பவத்தை உங்களின் அடிமனதில் நிறுத்தி அசைபோட்டுப் பாருங்கள். இஸ்லாத்தின் வெற்றி உங்களுக்கும் புரியும்.
பொதுவாக தினமலர் வாங்கினால் "இது உங்கள் இடம்" மற்றும் அந்துமணியின் "பார்த்தது-கேட்டது-படித்தது" ஆகிய இரண்டு தான் நான் மிகவும் விரும்பி படிக்கும் பகுதிகளாகும். எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன் 02/11/97 ல் பிரசுரமான தினமலர் கிடைத்தது. இது உங்கள் இடத்தில் பதிவாகியிருந்த இந்த சம்பவத்தை படித்து வெறுப்பதா? வேதனைப்படுவதா? என அறியாமல் திகைத்துவிட்டேன். அதை அப்படியே கீழே தருகின்றேன்.
எனக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் ஏராளமான பேனா நண்பர்கள் உண்டு. அவர்களில் ஒரு
நண்பர் என்னைப் பார்க்க எங்கள் ஊருக்கு வருவதாக கடிதம் எழுதியிருந்தார். நானும்
அவர் வருவதாகக் கூறியிருந்த நாளில் வெளியில் எங்கும் செல்லாமல் வழி மேல் விழி
வைத்துப் பார்த்திருந்தேன். நேரம் போனதுதான் மிச்சம் அவர் வரவே இல்லை.என் நண்பர்
அவர் குறிப்பிட்டிருந்த நாளில் வந்திருக்கின்றார். என் வீட்டிற்கு வழி கேட்கும்
போது என்னுடைய ஜாதி பற்றியும் அறிந்திருக்கிறார்.
நான் ஒரு தாழ்த்தப்பட்ட
இனத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்ததும் அப்படியே திரும்பி சென்று விட்டிருக்கிறார்.
இந்த விஷயம் எனக்குபிறகுதான் தெரிந்தது. உண்மையான நட்புக்கு கூடவா ஜாதி வேறுபாடு
பார்ப்பது என்று நொந்து கொண்டேன். இப்போதெல்லாம் பேனா நண்பர்களிடம் முன்கூட்டியே
என்னுடைய ஜாதி பற்றியும் எழுதி விடுகிறேன். பல நண்பர்கள் இதை கண்டிக்கின்றனர்.
எனினும் கசப்பான அந்தப் பழைய அனுபவத்தை இன்னும் மறக்கமுடியவில்லை.
வே.கார்த்திகேயன் களையகாவிளை. தினமலர் 02/11/97 (இது உங்கள் இடம்)
பகுதி.
நண்பர்களாக பழகுவதில் கூடவா ஜாதிவெறி!!
எனதருமை வாசகர்களே! நான் தாழ்ந்த ஜாதிக்கார(னாக சித்தரிக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவ) னல்லன். இருப்பினும் அந்த ஜாதீய சிந்தனைக்கு எதிரானவன் என்பதை இதுவரை என்னுடைய எழுத்துக்களிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். நானும் என்னுடைய சந்ததியும் இதுபோன்ற கொடுமையிலிருந்து காலாகாலத்திற்கும் விடுதலை அடைய வேண்டுமென்றால் நான் எடுத்த முடிவு சரியானது தான் என என்னால் ஆணித்தரமாகக் கூற இயலும்.