Saturday, January 21, 2006

ஆதமின் மகனே ஒரு நிமிடம்


தீர்மானிக்க வேண்டியதும் தேர்ந்தெடுக்க வேண்டியதும் நீ மட்டுமே.

நான் அல்லது நீ, அவன் அல்லது அவள்,தனிப்பட்ட ஒரு ஆள் அல்லது ஒரு சமூகம்,நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒன்று சாப்பிடுவதற்கான முயற்சியில் இருப்போம், அல்லது சுகமான தூக்கத்திற்காக மெத்தையில் படுத்திருப்போம், அல்லது ஆரோக்கியத்தை கட்டிக்காப்பதற்காக உடற்பயிற்சியில் மூழ்கியிருப்போம், அல்லது உடலையும் மனதையும் சுத்தமாக்க
குடும்பத்தோடு கடற்கரையில் குழாவியிருப்போம், அல்லது பைத்தியக்கார இசையில் லெகித்து இருப்போம், அல்லது திரையில் வரும் ஆபாச படங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்போம். அல்லது விழக்கப்பட்ட ஹராமான காரியங்களை செய்து கொண்டிருப்போம்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(03:185)
47:36.திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலியை உங்களுக்கு அளிப்பான்.

ஒருவேளை இதற்கெல்லாம் வித்தியாசமாக!

தொழவோ, குர்ஆன் ஓதவோ செய்யலாம், அல்லது அல்லாஹ்வை துதிக்கவோ திக்ரோ செய்யலாம் இந்த விஷயங்களையோ இதுபோன்ற விஷயங்களையோ நம்முடைய சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க முடியும் நீ வேலைக்குப் போகவும் வேலைக்குப் போகாதிருக்கவும் சாப்பிடவும் சாப்பிடாதிருக்கவும் தொழவும் தொழாதிருக்கவும் நம்மால் முடியும் இவையனைத்தும் நீ மட்டும் செய்ய வேண்டிய காரியங்கள் தீர்மானிக்க வேண்டியதும் தேர்ந்தெடுக்க வேண்டியதும் நீ மட்டுமே.
என்றால்

நீ இந்த நிமிடம் வரை அறிமுகப்படாத ஒரு காரியம் உண்டு, உன்னுடைய சொந்த முயற்சியில் தேர்ந்தெடுக்க முடியாத காரியம். உனக்கு இஷ்டம் இல்லை என்றாலும் நிர்பந்தமாக நீ எதிர் பார்க்க வேண்டிய ஒரு காரியம்.இன்றோ அல்லது நாளையோ! - ஆம் அது தான் உன் மரணம்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
21:35.ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது
29:57.ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதேயாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
அதை தொடர்ந்து நிர்பந்தமாக உன்னுடைய புதிய வீட்டிற்கு, புதியதொரு வாழ்க்கைக்கு புறப்படவேண்டியுள்ளது. உன்னுடைய அந்த வீடு ஒடுங்கியது மட்டுமல்ல காரிருள் நிறைந்ததுமாகும்.பாரம் கூடிய கல்லும் மண்ணும் மட்டுமே உன் மேல் மூடப்பட்டிருக்கும். சூட்டிலிருந்து உன்னை பாதுகாக்க ஏ.சி யோ அல்லது குளிரிலிருந்து பாதுகாக்க சூடோ அங்கு இல்லை. உன்மேல் மூடப்பட்டிருந்த (கஃபன்) உடையை அகற்றி நீ உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை கட்டிக்காத்த உன் உடம்பை திண்ணுவதற்கு சண்டையிடும் புழுக்கள் தான் உன்னைச் சுற்றிலும், ஆனால் இதை ஒன்றும் அறியாதவனாய் நீ , நீ மட்டுமே இருப்பாய்.

எப்படிப்பட்டது அந்த புதிய இடமும், வாழ்க்கையும்-

உன்னுடைய வாழ்க்கையை நீ பதிவு செய்தது நல்லவர்களின் கூட்டத்திலா? அல்லது கெட்டவர்களின் கூட்டத்திலா? எல்லாம் முடிந்து போன உன் வாழ்க்கையில் நீ உயிருடன் பூமியில் வாழும்பொழுது தேர்ந்தெடுத்தது போலிருக்கும் உன்னுடைய புதிய வாழ்க்கை. நீ உலக ஆசா பாசங்களில் மூழ்கி உன்னைப் படைத்த இறைவன் யாரென்றே தெரியாமல் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் அல்லாஹ்விற்கு இணைவைத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலையில் தான் தோன்றித்தனமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருப்பாய் என்றால் கஷ்டமும், நஷ்டமும் நிறைந்ததாகும் அவ்வாழ்க்கை.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
23:64.(இவ்வுலக)சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
23:65.''இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
23:66.என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
23:67.ஆணவங் கொண்டவர்களாக இரவுக் காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப்புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).

அல்லது அல்லாஹ்விற்கு பயந்தவனாக நபி(ஸல்)அவர்களின் மூலம் கற்றுத்தந்த முறைப்படி உன் வாழ்வை அமைத்திருந்தாய் என்றால் மரணத்திற்கு பிறகு உள்ள உன் வாழ்க்கை கஷ்டமில்லாத நரக நெருப்பின் வேதனையை அனுபவிக்காத கப்ரின் வேதனை இல்லாத சொர்க்கத்தில் சிறந்த வாழ்வாக அமையும்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
22:23.ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
02:25.(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் ''இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.

ஆனால்

இந்த நிமிடம் வரை உன் வாழ்க்கையை பின்னால் திரும்பிப் பார்த்து உன்னை நீயே சுயவிசாரணை செய்துகொள்ள சிறிய அவகாசம் உன் முன் உள்ளது. இன்றோ நாளையோ உன்னை அனுப்பி வைத்து விடக்கூடும். அதற்காக ஒரு சமூகம் தயாராக உள்ளது.அதற்கு முன் இச்சந்தற்ப்பத்தை புத்தியோடு உபயோகப்படுத்த வேண்டும். பூமியில் உள்ள எந்த சொத்தோ சொந்த,பந்தமோ உற்றார் உறவினர்களோ நண்பர்களோ மனைவி மக்களோ யாருமே உதவிக்கு வரமுடியாத அந்த நாளில் உனக்கு நீயும் உன் நற்கருமங்கள் மட்டுமே உதவி. அந்த நேரம் வருவதற்கு முன்னால் உலகையே படைத்து காக்கும் ஒரே இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து செய்த பாவங்களை நினைத்து வருந்தி பாவ மன்னிப்பு கேள் பாவங்களை பொருக்க அல்லாஹ் போதுமானவன்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
4:17 .எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும் ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.

எத்தனை எதார்த்த வாழ்க்கை (மண்ணறை)

நீ அதில் வெற்றி பெற்றால் உனக்கு என்றென்றும் வெற்றிதான். அதில் நீ தோற்றுவிட்டால் என்றென்றும் தோல்விதான்.

அவன் நல்லடியானாக பூமியில் வாழ்ந்திருந்தால்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
...அப்போது அவரிடத்தில் (முன்கர் நகீர்)என்ற இரண்டு மலக்குகள் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியாரை நோக்கி பின்வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.
கே : உனது இறைவன் யார் ?
ப : எனது இறைவன் அல்லாஹ்.
கே : உனது மார்க்கம் என்ன?
ப : எனது மார்க்கம் இஸ்லாம்
கே : உன்னிடத்தில் (மார்க்கத்தை போதிக்க)அனுப்பப்பட்டவர் யார்?
ப : அவர் அல்லாஹ்வுடைய தூதர் முஹமது(ஸல்) அவர்கள்
கே : நீ அதனை எவ்வாறுஅறிந்து கொண்டாய்?
ப : அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதினேன், அதனை விசுவாசம் கொண்டேன்,
அதனை உண்மைப்படுத்தினேன். எனது அடியான் உண்மையுரைத்துவிட்டான் அவனுக்காக சொர்க்கத்தின் விரிப்புகளை விரித்துவிடுங்கள். சொர்க்கத்தின் ஒரு கதவை அவனுக்காக திறந்து விடங்கள் என்று கூறக்கூடிய ஓசையொன்று அப்பொழுது வானத்திலிருந்து வரும். அவனுடைய கண் பார்வை எட்டுமளவுக்கு அவனது கப்ர் விசாலமாக்கப்படும். அப்பொழுது நறுமணம் கமழக்கூடிய அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவனிடத்தில் வருவார். ஆம்மனிதர் அவரை நோக்கி உனக்கு வாக்களிக்கப்பட்ட உன்னை மகிழ்வூட்டக்கூடிய ஒரு நன்னாள் இதுவாகும். என்று கூறுவார்.
அந்த மூமின் அம்மனிதரை நோக்கி நீ யார்? என்று கேட்பார். அப்பொழுது அம்மனிதர் நான்தான் (நீ உலகில் தேடி வைத்த) உனது சாலிஹான அமல்கள் (அல்லாஹ் தான் இந்த உருவில் உன்னிடம் என்னை அனுப்பியுள்ளான்.) என்று கூறுவார். அப்பொழுது அந்த மூமின்
அல்லாஹ்வே! எனது குடும்பத்துடனும் நான் தேடி வைத்திருந்த எனது அமல்களுடனும் சென்றடைய மறுமையை உண்டாக்குவாயாக!. என்று கேட்பார். முரண வேலையிலிருந்து கப்ர் வரை ஒரு மூமினுடைய நிலை இவ்வாரிருக்கும்.

அவன் இறை நிராகரிப்பவனாக பூமியில் வாழ்ந்திருந்தால்

நிராகரிக்கக் கூடியவன் மரண வேலையை நெருங்கி விட்டால் கருநிற (விகாரமான) முகத்துடன் சில மலக்குகள் வந்து அவனது கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி துணியிருக்கும்.அப்போது உயிரை கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்ந்து ஏ,, கெட்ட ஆத்மாவே..!அல்லாஹ்வின் புறத்திலிருந்து இழிவின்பாலும் அவனுடைய கோபத்தின்பாலும் நீ வெளியேறி வா!! என்று கூறுவார்.
அப்போது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுதும் ஓட ஆரம்பித்துவிடும். ஆனால் உயிரை கைப்பற்றக்கூடிய மலக்கு அவனுடைய உடலிலிருந்து உயிரை பலவந்தமாக பிடுங்கி விடுவார்.நனைந்த கம்பளியிலிருந்து ஒருமுடியை பிடுங்குவது எவ்வளவு கடினமோ, அதைவிட கடினமாக அந்த உயிரை பிடுங்கி எடுப்பார்.
பின்னர் அவ்வுயிர் அந்த கம்பளியால் சுருட்டப்பட்டு முதலாவது வானத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆது ஒரு பிணத்தின் வாடையை விட துர்நாற்ற வாடையாய் இருக்கும். முதலாவது வானத்தில் உள்ள மலக்குகள் இது என்ன? துர்வாடை என கேட்பார்கள். அப்பொழுது அந்த மலக்குகள் உலகில் வாழ்ந்தவர்களில் மிகவும் கெட்டவனான ஒருவனுடைய உயிர் கொண்டு வரப்படுகின்றது, என்று கூறுவார்கள்.
அதனை தொடர்ந்து வானை திறந்து விடுமாறு ரூஹை சுமந்து வந்த மலக்குகள் கூறுவார்கள். அவனுக்காக வானம் திறக்கப்பட மாட்டாது. நபியவர்கள் இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து பின் வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.
7:40 .எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
பின்னர் அல்லாஹ் அவ்வுயிரைச் சுமந்து வந்த மலக்குகளை நோக்கி அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ஸிஜ்ஜீன் என்ற இடத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவிடுவான். பின்னர் அந்த உயிர் முதலாவது வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு எறியப்படும். என்று நபியவர்கள் கூறிவிட்டு மீண்டும் தொடர்ந்து பின் வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.
22:31 .அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிபட்வர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.
ஸிஜ்ஜீனிலே அவனுடைய செயல்கள் பதியப்பட்ட பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். பின்னர் அவனிடம் இரண்டு மலக்குகள் வந்து அவனை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அவனை நோக்கி பின்வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.
கே : உனது இறைவன் யார் ?
ப : ஆ..ஆ.. எனக்கு தெரியாது
கே : உனத மார்க்கம் என்ன?
ப : ஆ..ஆ.. எனக்கு தெரியாது
கே : உன்னிடத்தில் (மார்க்கத்தை போதிக்க)அனுப்பப்பட்டவர் யார்?
ப : ஆ..ஆ.. எனக்கு தெரியாது
கே : நீ அதனை எவ்வாறுஅறிந்து கொண்டாய்?
ப : ஆ..ஆ.. எனக்கு தெரியாது

மேற் சொன்னவாறு அனைத்து கேள்விகளுக்கும் தனக்கு தெரியாது என்றே பதில் சொல்லுவான். இவன் பொய் சொல்லுகின்றான். நரகத்தின் விரிப்புகளை இவனுக்காக (கப்ரில்) விரித்து விடுங்கள்.நரகத்தின் பக்கமிருந்து இவனுக்காக ஒரு கதவை திறந்து விடுங்கள். என்று கூறக்கூடிய ஓசையொன்று அப்பொழுது வானத்திலிருந்து வரும்.
நரகத்திலிருந்து உஷ்ணமும், விஷக்காற்றும் அவனுடைய கப்ர்க்குள் வீசும். அதனால் காற்று வீசும் பொழுதெல்லாம் அவன் மயக்கமுற்று விழுவான். அவனுடைய வலது இடது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி விடுமளவு கப்ர் அவனை நெருக்கும்;. அழுக்கான ஆடையும் அவலட்சண முகமும் கொண்ட துர்வாடை வீசக்கூடிய ஒரு மனிதன் அவனிடம் வருவான் அம்மனிதன் அவனை நோக்கி உனக்கு வாக்களிக்கப்பட்ட கேடு உண்டாக்கக்கூடிய இந் நாளை நான் உனக்கு நினைவு கூறி நன்மாராயம் கூறுகின்றேன்.என்பான்.அப்பொழுது அவன் அவலட்சனமான இந்நிலையிலிருக்கும் நீ யார் ? என கேட்பான். நான் தான் உனது தீய செயல்கள். என்று அவன் பதிலளிப்பன். அதனை தொடர்ந்து இறைவனே! நீ மறுமையை உண்டாக்காதே! என்று புலம்ப ஆரம்பித்து விடுவான்.
அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி)
நூல்கள்: அஹ்மத், அபூதாவுத், ஹாகிம்.

இது மறுமையை நம்பியவர்களுக்காகும் இதை நம்பியவர்களைத்தான் முஸ்லிம்கள் என்று பூமியில் அழைக்கப்படுகின்றனர்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

... இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ''உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).(06:93)


இறுதி உபதேசம் (இஸ்லாம், முஸ்லிம்)

தெளிவான அறிவு மண்ணறை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன்; தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக் கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான், உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கருகிலிருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணர முடியவில்லை என்றால் மரணித்தவனின் மண்ணறை வேதனையை உயிருள்ளவன் எப்படி நேரடியாக உணரமுடியும். மண்ணறை வேதனை என்பது உடலுக்கும் உயிருக்கும் சேர்ந்ததேயாகும். எனவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் நரக வேதனையிலிருந்து தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்.


அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

..இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன் (05:03)

''என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். '(2:132)
இந்த உலகத்தில் எத்தனைதான் மார்க்கங்கள் மதங்கள் போதனைகள் இருந்தாலும் அவை எத்தனை வழிமுறைகளை சொன்னாலும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இஸ்லாம் மட்டுமே என்பதை நாம் மறந்துவிடாமல் ஆராய வேண்டும்.முஸ்லிமானால் மட்டுமே ஷிர்க்கை தவிர நீங்கள் என்னதான் பாவங்கள் செய்தாலும் அதற்குரிய தண்டணைக்குப் பிறகாவது சொர்க்கம் செல்ல முடியும் கப்ர் வேதனையிலிருந்தும் தப்பமுடியும்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
3:102.நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.''(2:132)
39:54.ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
எனதருமை சகோதரனே உன்மீது எனக்கொரு கடமை உள்ளது அது நம் இறைவனின் சத்திய மார்க்கத்தை உன் முன் எந்த வழியிலாவது எத்தி வைக்க வேண்டும் என்பதாகும்

ஒரு நிமிடமேனும் சிந்திப்போம் செயல் படுத்துவதற்காக...!

தீர்மானிக்க வேண்டியதும் தேர்ந்தெடுக்க வேண்டியதும் நீ மட்டுமே.

அல்லாஹ் நம்மை அந்த வேதனையிலிருந்து காப்பாற்றுவானாக...!

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..!