என்னிடமிருந்து என் பிறப்பு தொடங்கி இன்றுவரையான எல்லாத் தகவல்களையும் ஐந்து கேள்விகளுக்குள் அடக்கி, பதில் தருமாறுக் கேட்டிருக்கின்றீர்கள். ஆனால், உங்களைப் பற்றி - குறைந்த பட்சம் - ஒரு மின்னஞ்சல் முகவரிகூட இல்லாமல் அனானியாக அறிமுகமாகி இருக்கின்றீர்கள். நீங்கள் பார்க்கக் கூடிய எத்தனை வெப்சைட்கள் பயடேட்டாவுடன் வலம் வருகின்றன.
என்றாலும் என்னைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் காட்டியிருக்கும் ஆர்வத்துக்கு நன்றி! உங்கள் ஆர்வத்துக்காகக் கொஞ்சம் அவல் தந்திருக்கிறேன், நீங்கள் உமிகூடத் தராத போதும்.
என்னுடைய பயோடேட்டாவை பற்றித் தெரிந்து கொள்வதைவிட ' இவன் ஏன் இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மாறினான்?' எனத் தெரிந்து கொள்வது உங்களுக்கும் உங்கள் சமூகத்திற்கும் பலன் தரும் என நினைக்கின்றேன்.
நம்முடைய உற்ற நண்பர் ஒருவர் நம்முடன் சரியாக பேசவில்லை என்றால் அதற்காக ஆ.... ஊ..... என்று கத்தாமல் அவர் நம்மோடு பேசாத அளவிற்கு நாம் என்ன தவறு செய்திருக்கின்றோம்? அல்லது அவர் மனம் நம்மிடம் ஏதோ குறைகண்டிருக்கின்றது எனச் சிந்திப்பதுதான் ஆக்கப்பூர்வமான, விவேகமான சிந்தனையாகும்.
என் தந்தை அடிக்கடி சொல்வார் "நாயின் மீது கல்லை எறிந்தால் அந்த நாய் கல்லைக் கடிக்காது... எறிந்த ஆளைத்தான் கடிக்கும்" என்று. அதனால் என்னைப் பற்றிச் சிந்திப்பதை விட என்போன்ற இளைஞர்கள் ஏன் மதம் மாறுகின்றனர் எனச் சிந்தியுங்கள். உங்களின் சிந்தனைக்காக ஒரு சில விஷயங்களை உங்களுக்கு சொல்கின்றேன் :
தந்தை பெரியார் "இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என்று ஏன் சொன்னார் என்பதைச் சிந்தியுங்கள்.
டாக்டர் அம்பேத்கார் 1 லட்சம் தொண்டர்களோடு இந்து மதத்திலிருந்து புத்த மதத்தை ஏன் தழுவினார் எனச் சிந்தியுங்கள். இன்ஷா அல்லாஹ் விடைகிடைக்கும் .
இவர்களைப் போன்றவர்கள் பணத்திற்காகத்தானே இஸ்லாத்தை ஏற்கின்றனர் என நீங்கள் முணுமுணுக்கக் கூடும். ஒரு வாதத்திற்கு அது சரியென்றே வைத்துக் கொண்டாலும் சாதாரண ஏழை மக்களைத் தானே அப்படி வாங்க முடியும்?
ஆனால், உலகத்தில் எந்த ஒரு இன்பத்தையும் பாக்கி வைக்காத, பெண்ணாலும் பொன்னாலும் கொடிகட்டிப் பறந்த கேட் ஸ்டீவன்ஸ் என்ற உலகப் புகழ்பெற்ற பாடகரை ( இன்றைய யூசுஃப் இஸ்லாம் என்பவரை) யார் விலை கொடுத்து, எவ்வளவுக்கு வாங்கினர்?
உடலியல் நிபுணரான டாக்டர் மாரிஸ் புகைலை எவ்வளவு கொடுத்து யார் விலைக்கு வாங்கினர் ?
மனித வரலாற்றில் சரித்திரத்தில் புகழ் பெற்ற 100 பேரின் வாழ்க்கையையும் அவர்கள் எடுத்துக் கொண்ட துறையையும் ஆராய்ச்சி செய்து, "அரேபியாவை சேர்ந்த எழுதப்படிக்கத் தெரியாத முஹமது நபிதான் முதலிடத்திற்குரியவர்" என கூறிய மைக்கேல் ஹார்ட் என்ற புகழ்பெற்ற ஆராய்சியாளரை யார் விலை கொடுத்து வாங்கினர்?
மேற்காண்பவற்றைப் பற்றிச் சிந்திப்பது என்னைப் போன்ற சாதாரண மனிதனின் பிறப்பைப் பற்றிச் சிந்திப்பதைவிட பன்னூறு மடங்கு பயனுள்ளதாகும். சிந்தித்துப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ் விடை கிடைக்கும்.
இருப்பினும் என் பயடேட்டாவை தருகின்றேன்:
தந்தை பெயர்: ஆதம்
தாயின் பெயர்: ஹவ்வா
சகோதரர்கள்: இரண்டு
உறவினர்கள்: 498 கோடி
பிறந்தது வளர்ந்தது மரணிக்கவிருப்பது: பூமியில்
இதற்கு மேல் எதுவும் தேவையில்லையென நினைக்கின்றேன்.
கருவூரிலே இருந்து மண்ணூரிலே பிறந்து காளையூரில் வளர்ந்து என்ற பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.
உங்களுக்கு நற்சிந்தனையையும் நேர்வழியையும் வழங்குவதற்கு நான் வணங்கும் இறைவனை வேண்டி முடிக்கிறேன்.
நன்றி!
அன்புடன்
ஸாலிஹ்(குலசை)