“ஆறு திரட்டுகள்”
இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களாக உலகம் முழுதும் ஒப்புக் கொள்ளப்பட்டவை அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுமாகும். இதில் நபி மொழிகள் தொகுக்கப்பட்ட வரலாற்றை - குறிப்பாக முஸ்லிம்களால் கருத்தொற்றுமையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகாரி - முஸ்லிம் - திர்மிதி -நஸாயி- அபூதாவூத் - இப்னுமாஜா ஆகிய ஆறு கிரந்தங்களின் பின்னணியையும் இதர ஹதீஸ் தொகுப்புகளின் பின்னணியையும் இங்கே காண்போம்.“நபித்தோழர்கள்”
நபி-ஸல்- அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களிடம் பாடமும் பயிற்சியும் பெற்ற நபித் தோழர்கள் நபிவழிக்கு தம் வாழ்க்கையில் செயல் வடிவம் கொடுத்ததோடு பிறருக்கு வாய்வழி செய்தியாகவும் அதை எடுத்துரைத்து வந்தனர்.எழுதப் படிக்கத் தெரிந்த மிகச் சொற்பமான தோழர்கள் நபி வழியை பதிவு செய்தும் வைத்துக் கொண்டார்கள்.
அரபி அல்லாதவர்களின் அரிய சாதனைகள்
நபிக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற நல்லவர்களின் கால கட்டங்களில் இஸ்லாமிய வளர்ச்சி வேகம் பிடித்தது. அரபி மொழி பேசுபவர்களைக் கடந்து அது விரிவாக வளர்ந்த போது அந்த மக்களுக் கெல்லாம் நபிவழியை சேர்க்கும் அவசியம் உணரப்பட்டது. இப் பணியை வேகமாக முன்னெடுத்தவர்களில் பெரும்பாலோர் அரபி அல்லாதவர்கள்தான்.
ஹதீஸின் பொற்காலம்
ஹிஜ்ரி 100 முதல் 300 வரையுள்ள காலகட்டங்களை நபிவழி தொகுக்கப்பட்டதின் பொற்காலம் எனலாம். இக் காலகட்டங்களில் பற்பல ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்டாலும் மக்களிடம் நாம் மேல்குறிப்பிட்ட ஆறு நூல்களே வெகுவாகச் சென்றடைந்தன. இந்த நூல்களையே பிற்காலத்தில் மக்கள் “ஸிஹாஹ் ஸித்தா” (ஆறு ஆதாரப்பூர்மான திரட்டுகள்) என்று அழைக்கத்துவங்கினர்.
ஸிஹாஹ் ஸித்தாவைத் தொகுத்தவர்கள்
இந்த ஆறு நூல்களை தொகுத்தவர்களையும் அவர்களின் கால கட்டங்களையும் பார்ப்போம்.
1.இமாம் புகாரி (194 - 256) நாடு:புகாரா, (ரஷ்யா) 62 வயது
2 இமாம் முஸ்லிம் (206 - 261)நாடு: நைஷாபூர் ஈரான் (பாரசீகம்)55 வயது
3 இமாம் அபூதாவூத் (202 - 275)நாடு: சிஜிஸ்தான் (இராக்) 73 வயது
4 இமாம் நஸாயி (214 - 303) நாடு:நஸா (ஈரான்) 89 வயது
5 இமாம் இப்னு மாஜா (209 - 273)நாடு: ஆதர்பைஜான் (ஈரான்) 64 வயது
6 இமாம் திர்மிதி (209-279)நாடு திர்மிதி (குராஸான்) 70 வயது
இந்நூல்கள் மக்களின் தேவைக்கேற்ப பாடங்களாக இலகுபடுத்தி அவற்றுக்கு தலைப்பிட்டு தொகுக்கப் பட்டுள்ளன. இவை ஒவ்வொரு நூலிலும் 4000 த்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் அடங்கியுள்ளன. இவற்றில் இமாம்களின் ஆய்வுகளையும் கடந்து பலவீனமான சில ஹதீஸ்களும் இடம் பெற்றன.அவை அவற்றிற்கு அடுத்த கால கட்டங்களில் அலசி ஆராயப்பட்டு பிரித்தெடுத்து இனங்காட்டப்பட்டன. அவை தனி வரலாறாகும்.
இவை பற்றிய விரிவான ஆய்வுகளை ஷெய்கு முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி போன்றவர்களின் அல்ஜாமிவுஸ்ஸகீர் வஸியாததுஹு-ளயீஃப் -ஸஹீஹ்-நூல்களில் காணலாம்.
இந்நூல்கள் தொகுக்கப்படுவதற்கு முந்திய காலகட்டங்களில்-முஸ்னத்-தாக பல ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்டு விட்டன.
முஸ்னத்- என்றால் என்ன?
நாம் குறிப்பிட்டுள்ள ஆறு ஹதீஸ் நூல்களில் பாடங்களின் தலைப்பிட்டு அவற்றிற்கு கீழ் தேவையான ஹதீஸ்களை எடுத்தெழுதும் இந்த போக்கு இல்லாமல் ஒருவரிடமிருந்து பெறும் எல்லா ஹதீஸ்களையும் அவருடைய பெயருக்குக் கீழே கொண்டுவரும் இந்த வழிமுறைக்கே “முஸ்னத்” என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது.
உதாரணமாக, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் தொகுத்த “முஸ்னத் அஹ்மத்” என்ற நூலில் முதல் பாடமாக “முஸ்னத் அபீ பக்கர்” இடம் பெறுகிறது. இதில் முதற் கலீஃபா(ஜனாதிபதி) அபூபக்கர் - ரலி-அவர்களிட மிருந்து கிடைத்த எல்லா ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன. இத்தகைய முஸ்னத் ஹதீஸ் நூல்கள் புகாரி முஸ்லிம் போன்ற நூல்கள் தொகுக்கப்படுவதற்கு முன்பே ஹிஜ்ரி 93 லிருந்து ஹிஜ்ரி 191 வரையுள்ள கால கட்டங்களில் தொகுக்கப்பட்டன
முஸ்னத் நூல்கள் (ஹி93-191)
அவற்றுள் முக்கிய நூல்கள் சில:- ( ஹிஜ்ரி 93 லிருந்து ஹிஜ்ரி 191 வரை தொகுக்கப்பட்ட முஸ்னதுகள்)
1. முஸ்னத் முவத்தா
2. முஸனத் ஷாஃபியீ
3. முஸ்னத் அஹ்மத்
4 முஸ்னத் தவ்ரி
5. முஸ்னத் முஹம்மத் பின் ஸலாமா
6. முஸ்னத் இப்னு முபாரக்
7. முஸ்னத் இப்னு உஅய்னா
8. முஸ்னத் இப்னு முஅம்மர்
9. முஸ்னத் இஸ்ஹாக் இப்னுரராஹ்வைஹ்
10.முஸ்னத் அவ்ஸாயி
11.முஸ்னத் பகீ போன்றவற்றை குறிப்பிடலாம்.
அடுத்த காலகட்டத்தில் ஆறு பெரும் கிரந்தங்கள் தொகுக்கப்படுவதற்கு இந்த முஸ்னத்கள் பெரிதும் உதவின.இதைத் தவிர வேறு பல ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களும் உள்ளன.
ஹதீஸின் இதர ஆதார நூல்கள்
அவற்றுள் முக்கிய ஹதீஸ் நூல்களும் அதன் தொகுப்பாளர்களும்
01 தப்ரானி (அபுல் காஸிம் சுலைமான் இப்னு அஹ்மது 209-273 தபரிய்யா-ஜோர்டான்)
02 அபூ யஃலா (அஹ்மது இப்னு அலி இப்னுல் முதன்னா 210-307 முதன்னா)
03 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (அபூ ஹாத்தம் முஹம்மது இப்னு ஹிப்பான் — 354 ஸமர்கந்த்-(இமாம் ஹாகிமின் ஆசிரியர்)
04 ஸஹீஹ் இப்னு குஸைமா (அபூபக்ர் முஹம்மது இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா 223-311 நைஸாபூர்)
05 ஸுனனு பைஹகீ (அபூபக்ர் அஹ்மது இப்னு ஹுஸைன் அல்பைஹகீ 384-458 குராஸான் (இமாம் ஹாகிம்pன் மாணவர்)
06 ஹாகிம் (அபூ அலீ அந்நைஸாபூரீ)
07 ஸஹீஹ் அபீ அவானா (யஃகூப் இப்னு இஸ்ஹாக் இப்னு இப்றாஹீம்)
08 தார குத்னீ (இமாம் தார குத்னீ)
09 தாரமீ (இமாம் தாரமீ)
10 அல் பஸ்ஸார் (அஹ்மது இப்னு அம்ருப்னு அப்துல் காலிக் -292 பஸரா- ஈராக்)
11 இப்னு அபீ ஷைபா (இப்னு அபீ ஷைபா)
12 இப்னு அபீ கைஸமா (இப்னு அபீ கைஸமா)
13 அப்துர் ரஸ்ஸாக் (இமாம் அப்துர் ரஸ்ஸாக்)
14 இப்னுல் ஜாரூத் (இமாம் இப்னுல் ஜாரூத்)
15 நைஸாபூரீ (அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் 321-405 நைஸாபூர்)
16 இப்னு அபித்துன்யா (அபூபகர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அபித்துன்யா அல்குறஷீ 208-282)
ஸஹீஹ்,ஹஸன், ளயீப்
ஹதீஸ்களில் ஸஹீஹானவைகளும் அவையடுத்த தரத்தையுடைய “ஹஸன்” என்பவைகளும்உள்ளன.இவற்றுள் ளயீஃப் பலவீனமான பல ஹதீஸ்கள் சேர்ந்துள்ளதால் அவற்றை களை எடுப்பதற்காக இமாம்கள் கடுமையான பல நிபந்தனைகளையும் விதித்துள்ளார்கள். அந்த விதிகளுக்கு உட்பட்டிருநதால் தான் அவற்றை நமடபகரமான ஹதீஸ்களாக ஏற்றுக் கொள்வர்.இல்லையேல் அவற்றை ஒதுக்கிவிடுவர்.
இங்கே சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
ஸஹீஹான ஹதீஸ்களுக்குரிய விதிகள்
1.அறிவிப்பாளர் தொடரில் அனைவரும் நம்பத்தகுந்தவராக இருத்தல்.
2.அறிவிப்பாளர் நூறு சதவிகிதம் நினைவாற்றல் மிக்கவரதக இருத்தல்.அல்லது
பிழையில்லாது ஏட்டில் பதிவு செய்பவராக இருத்தல்.
3.ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது ஆசியரியர்களிடமிருந்து நபி மொழிகளை நேரடியாகத்
தெரித்திருக்கவேண்டும்.
4. தம்மைவிட நம்பத்தகுந்த அல்லது நினைவாற்றல் மிக்கவருடைய நபிமொழிக்கு
(ஹதீஸிற்கு)முரண்படாதிருத்தல்.
5. அறிவிப்பாளர் தொடரில் மறைமுகமான குறைகள் காணப்படாதிருத்தல்.( உ-ம் : ஒரு
ஸஹாபியின் தனிப்பட்ட கருத்தை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ரிவாயத்-
தெரிவிப்பதாகும்.
இவை முதல் தர வகையைச்சார்ந்த ஹதீஸ்களாகும்.
அடுத்து “ஹஸன்” தரத்தைச்சார்ந்த ஹதீஸ்களை இரண்டாம் தர வகைகளாகக் கொள்கின்றனர்.இவை ஸஹீஹான ஹதீஸிற்குரிய ஐந்து விதிகளில் இரண்டாவது விதியில் மட்டும் சற்று மாறுபடுவதாகும்.அதாவது அறிவிப்பாளர் நூறு சதவிகித நினைவாற்றலில் சற்று குறைந்தவராக இருப்பதாகும்.
இந்த வகை ஹஸன் தர ஹதீஸ்கள் ஒன்றாகச்சேர்ந்து ஒரு நபிமொழியைத் தெரிவிக்கும் போது ஸஹீஹான ஹதீஸ் தரத்தை எட்டுவதாக ஹதீஸ்கலை இமாம்கள் கருதுகின்றனர்.
ளயீஃபான ஹதீஸ்கள் என்றால் என்ன?
ஸஹீஹ், ஹஸன் ஆகியவைகளுக்குக் கூறப்பட்ட ஐந்து விதிகளில் ஒன்றுவிடுபட்டிருந்தால் அவை ளயீஃபான தரத்த்துக்குத் தள்ளப்படும். இவை ஊர்ஜிதமற்ற நம்பகத்தன்மை இழந்த ஹதீஸ்களாகக் கருதப்படும்.
( பொய்யர் அல்லது ஹதீஸ்களில் மிக அதிகமாக தவறு செய்பவர் என்று குறை கூறப்பட்ட அறிவிப்பாளரைத் தவிர்த்து ளயீஃபான பல ஹதீஸ்கள் ஒள்று சேர்ந்து சில சமயம் ஹஸன் தரத்தை எட்டுவதுண்டு. இவை மிக அபூர்வமாகும்.ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை.
பலவீனமான ஹதீஸ்களை தெரிந்து கொள்ளும் இன்னும் சில வழிகள்!
குர்ஆனும் ஹதீஸ்களும் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் எனக்கூறும்போது ஹதீஸ்களில் ளயீஃபான (பலவீனமான)ஹதீஸ்களும் உண்டா? இருக்க முடியுமா ? என நம்மில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கேலியும் கிண்டலும் செய்கின்றனர். நியாயமான கேள்விகள் தான்! இருப்பினும் அவற்றிற்கான தெளிவான விடைகளை தெரிந்து கொள்வது அவசியாகும்.
உண்டு என்றால் பலவீனமான ஹதீஸ்கள் உருவானதுஎப்படி? அதை இனம் கண்டு கொள்வது எவ்வாறு ? என்பதை கீழே காண்போம்.
“ஹதீஸ் கலை” என்பது ஆழ்ந்த அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய செய்திகளல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படைச்செய்தி இதுதான்.
1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.
2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.
3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.
4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.
5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.
6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.
7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல நினைவாற்றலுடன் இருந்து பிற்காலத்தில் நினைவாற்றலில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.
8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.
9. மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.
10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.
11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனமாகும்.
12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.
13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
14. தமது கருத்தை நியாயப்படுத்துவதற்காக அல்லது நம்ப வைப்பதற்காக ஆதாரமில்லாது கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான வழிகளில்-மொழிகளில் -பலகீனமாக வரும் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36).
என்ற இறைக் கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். எனவே ஹதீஸ்கலை மேதைகள் தரம் பிரித்து ஸஹீஹானவை- நம்பத்தகுந்தவை-என்று அடையாளம் காட்டப்பட்ட ஹதீஸ்களையே நாம் ஏற்க வேண்டும்.
(குறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸான், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது)
No comments:
Post a Comment