Sunday, September 23, 2007

குர்ஆன் விடுத்த சவால்

குர்ஆன் ஓர் அழியாத அற்புதம் பாகம் 1

அன்பார்ந்த சகோதரர்களே புண்ணியமான கண்ணியமிக்க ரமழான் மாதத்தில் அதன் மகத்துவம் பற்றி எழுதுவதில் நான் பெறுமைப்படுகின்றேன். குர்ஆனின் வாக்குகளும், வார்த்தைப்பிரயோகமும் கேட்போரை வசீகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆம் உண்மைதான் இதோ உலகிலே மிக பிரமுகர்கள் என்று எல்லோரும் சொல்லக்கூடிய சிலர் குர்ஆனைப்பற்றி சொன்ன சிலவற்றை கண்போம்.

அறிஞர் கொய்தே (Goethe) கூறுகிறார்:
குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அந்நியமாகத் தெரிகிறது. பிறகு புதமையாகத் தெரிகிறது. அடுத்து ஒரு தென்றல் போல் மனதைக் கவர்ந்து செல்கிறது. மதிப்பச்சததை ஏற்படுத்துகிறது. அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீராமாகவும, வலுவானதாகவும், அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அதன்மீது மதிப்பு கொள்ளச் செய்வதாகவும் அமைந்துள்ளது. இந்த நூல் இவ்வாறு காலம் காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது. Quoted in T.P. Hughes Dictionery of Islam, P.526.

மார்கோலத் (G.Margolouth) கூறுகிறார்:
உலகத்திலுள்ள பெரும் மதக்கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும், பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழவாக ஒன்றிணைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. ஐரொப்பிய மக்களும் கிழக்கிந்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய, அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது. Introduction to J.M.Rodwell’s The Koran, New York : Every Man’s library 1977, p.VII.

மாரீஸ் புகைல் (Maurice Bucaille) கூறுகிறார்:
நாம் மேலே கூறி வந்த விபரங்கள், முஹம்மத் (ஸல்) அவர்கள் குர்ஆனைப் புனைந்தார் என்று சொல்லப்படும் கூற்று அடிப்படையற்றது என்று தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கல்வி அறிவில்லாத ஒருவர், திடீரென சிறந்த இலக்கியம் நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் - இன்றைக்கும் அரபி இலக்கியத்pல் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராய் ஆக முடியுமா? அதுமட்டுமல்ல, அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனின் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டுபிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித் துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது? The Bible, The Quran and Modern Science 1978, p.15

இப்படி பெரியோர்களால் போற்றக்கூடிய குர்ஆன் அதை தூற்றக்கூடியவர்களும் இப்புவியில் இருக்கத்தான் செய்கின்றனர் அதனால் அவர்களின் வாயை அடைக்கவும், நம்பிக்கையாளர்களுக்கு தைரியமூட்டவும் அல்லாஹ் சில வசனங்களை தந்து இதுபோல் உங்களால் முடிந்தால் செய்யுங்கள் என்று சவால் விடுகின்றான் இந்தச் சவாலை எதிர்கொள்ள 1425 வருடமாக இப்பூமியில் யாருக்கும் தைரியமோ, திரானியோ இல்லை என்பதுதான் அதிசயம். அ துதான் முஸ்லிம்களின் தைரியமும் கூட. அதுபோன்ற ஒரு வசனத்தை இதோ தருகின்றேன் பாருங்கள்.

மேலும் நம் அடியார் மீது இறக்கி வைத்த (இவ் வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாள இருந்தால் இது போன்ற அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் (அவ்வாறு) செய்யவில்லையாயின் - நீங்கள் ஒரு போதும் (அவ்வாறு) செய்ய மாட்டீர்கள்: ஆகவே மனிதர்களும் கல்லும் அதன் எரிபொருளாகுமே அத்தகைய (நரக) நெருப்பைப் பயந்து கொள்ளுங்கள் (இந்த நெருப்பு) நிராகரித்துக் கொண்டிருப்போருக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல் குர்ஆன், 2:23-24)

குர் ஆனில் தவறு உள்ளது!, தவறு உள்ளது என்று தூக்கத்தில் புழம்புவதைபோல் கூச்சலிடுகின்றனரே தவிர மாற்றுவழி செய்துள்ளனரா? இந்த சவாலை முறியடிக்க முயற்சித்தனரா என்றால் இல்லை.

குர்ஆனைப் பற்றி
பொதுவாக எந்த ஒரு நபிக்கும் அல்லாஹுத்தஆலா அற்புதங்களை வழங்கும் போது எவை அந்த காலத்து மக்களிடத்தில் பிரபலமானதாகவும் உள்ளதோ அவற்றையே நபிமார்களுக்கு அற்புதமாகத் தேர்ந்தெடுப்பான். இது அல்லாஹுதஆலாவின் பொதுவான நியதியாகும்.

உதாரணமாக மூஸா (அலை) அவர்கள் காலத்தில் சூனியமே மக்களின் சிந்தனையை கவரக் கூடியதாக இருந்தது. சூனியத்தில் கைதேர்ந்தவர்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். எனவே சூனியத்தை வென்று விடக் கூடிய அது போன்ற சில அற்புதங்கள் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல ஈஸா (அலை) அவர்கள் காலத்தில் மக்களின் சிந்தனை மருத்துவத்துறையில் மூழ்கிக் கிடந்தது. எனவே மருத்துவத்தால் கூட குணப்படுத்த முடியாத மிகச் சிறந்த அற்புதம் ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மொழிப் பாண்டித்துவம் பெறுவதில் தங்கள் கவனம் முழுவதையும் ஈடுபடுத்தினார்கள். அரபி மொழியில் கை தேர்ந்த கவிஞர்களும் மொழிப் பண்டிதர்களுமே சமுதாயத்தில் கண்ணியமானவர்களாகக் கருதப்பட்டார்கள். எனவே அது சம்பந்தமாகவே சொல் நயமும், கருத்து நயமும் நிறைந்த எந்த மொழி பண்டிதர்களாலும் ஈடுகொடுக்க முடியாதளவு மிகப் பெரிய அற்புதமாக அல்குர்ஆன் அருளப்பட்டது.

இதுவே அல்லாஹ் ஒவ்வொரு நபியின் அற்புதங்கள் விஷயத்தில் கையாளும் நடைமுறையாகும். ஆனால் இங்கு மற்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களை விட நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அல்குர்ஆன் தனிச்சிறப்புப் பெற்றுள்ளது. எவ்வாறெனில் மற்ற நபிமார்களின் அற்புதங்கள் அவர்கள் கரங்களாலேயே நிகழ்த்தப்பட்டு அவர்களோடு அந்த அற்புதங்களும் மறைந்து விட்டன. ஆனால் அல்குர்ஆன் என்ற இந்த அற்புதம் மட்டும் தான் அல்லாஹ்வினால் நிகழ்த்தப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் நிலைத்திருக்கிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மெய்ப்பிக்கும் ஆதாரமாகவும் இஸ்லாமிய எதிரிகளின் வாயை அடைக்கும் அறைகூவலாகவும் அல்லாஹ் இதனையே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

சவாலை கையாளும் விதம்
முதலில் முழுக்குர்ஆனையும் சவாலாக வைத்து இது போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று பின்வரும் வசனத்தில் சவால் விடுத்தான்:

இந்தக் குர்ஆன் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று) அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது என்று (நபியே!) நீர் கூறும் (17:18)

இரண்டாவதாக இது போன்றதொரு குர்ஆனை முழுமையாகக் கொண்டு வராவிட்டாலும் இதில் இருப்பது போன்று பத்து சூறாக்களையாவது கொண்டு வாருங்கள் எனக் கூறினான்.

இவ்வேதத்தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? (அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களைக் கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையும் இதற்குத் துணையாக அழைத்துக் கொள்ளுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக. (11:13).

மூன்றாவதாக மேற்கூறிய எதுவும் முடியாமல் போக கடைசியில் ஒரு சிறிய சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று இந்த வசனத்தில் தொடர் சவால் விடுத்தான். ஏனெனில் மக்கத்து குறைஷிகள் 'இது இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டதல்ல' என்றும் 'முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமகவே இட்டுக் கட்டிய செய்திகள் தான் இவை' என்றும் கூறி வந்தனர். எனவே தான் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பது உண்மை எனில் நீங்களும் மனிதர்கள் தானே இது போன்ற முழு சூராவாக இல்லாவிட்டாலும் பத்து சூராவையாவது உருவாக்கிக் காட்டுங்கள் என்ற நோக்கில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சவால் விடுத்தான். இல்லையென்றால் சிறிய சூரா என்ன அதிலுள்ள ஒரு வார்த்தையைக் கூட அவர்களால் உருவாக்க முடியாது என்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால்தான் உங்களால் ஒருபோதும் முடியாது என்றும் கூறுகின்றான்.

1) இதை போன்றே உருவாக்க முயற்சிக்கப்பட்டது
ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஆயிரக்கணக்கானோர் மோதி தோல்வி கண்ட அறைகூவல் தான் இது. நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே யமாமா பிரதேசத்தைச் சேர்ந்த பொய்யனான 'முஸைலமா' என்பவன் தன்னை நபி என்றும் தனக்கு வஹி வருவதாகவும் வாதிட்டான். அவன் குர்ஆனிலுள்ள அல் கவ்ஸர் என்ற அத்தியாயத்தைப் போன்று இட்டுக் கட்டினான். ஆனால் அது அவனுடைய காலத்திலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

2) ஆசை வார்த்தை காட்டப்பட்டது
இதைப்போன்று உருவாக்கவும் முடியவில்லை, அதன் வளர்ச்சியை தடுக்கவும் முடியவில்லை இதைப்போன்று உருவாக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர்கள் கடைசியில் முஹமதோடு சமாதானமாக போய்விட்டால் அதன் வேகத்தைத் தடுக்கமுடியும் என்று மனப்பால் குடித்து நபியிடம் வந்து சமாதானம் பேசப்பட்டது, உத்பா பின் ராபிஆ என்பவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து தங்களது முழு அரசாங்கத்தையும், அனைத்து செல்வங்களையும் அழகிய பெண் மக்களையும் கிரயமாகக் கொடுக்கின்றோம் ஆனால் இஸ்லாத்தை இஸ்லாத்தின் பிரச்சாரத்தை மட்டும் விட்டு விட வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் பதிலாக குர்ஆனின் சில வசனங்களை மட்டுமே அவருக்கு ஓதிக் காட்டினார்கள். இத்தகைய நிலைக்கும் இறங்கி வர தயாரான அந்த மக்கள், இரண்டு வரி அரபு வார்த்தைகளை அமைத்து அல்லாஹ்வின் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக முடியவில்லை. அந்த முயற்சியிலும் முகத்தில் கரிபூசப்பட்ட மக்கா தலைவர்கள் மூன்றாவதாகவும் முடிவாகவும் ஒரு முயற்சியில் இறங்கினர்.

3) ஒழித்துக்கட்ட சதி

நபித்துவத்தின் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிய போது நபித்தோழர்கள் பலர் ஹிஜ்ரத் செய்து மதீனா நகரை அடைந்தனர். முஸ்லிம்கள் மதீனா சென்று தமது வலிமையைப் பெருக்கி கொண்டே செல்வதையும், அங்கு இஸ்லாம் பரவிக் கொண்டே செல்வதையும் பார்த்த குறைஷிகளுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. எனவே அவர்கள் இஸ்லாத்தை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிட பல திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர்.

பொதுவான சமுதாயப் பிரச்னைகள் எதைக் குறித்து சிந்திப்பதற்காக, 'தாருத் நத்வா' என்ற ஆலோசனை மண்டபம் ஒன்று இருந்தது அங்குதான் ஒன்று கூடுவர். அங்கு ஒவ்வொரு குலத்தையும் சேர்ந்த பெரும் தலைவர்கள் ஒன்று கூடி இனி இந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டிட என்ன செய்வது? என்று யோசித்தனர்.

1) சிலர் முஹம்மத் (ஸல்) அவர்களை விலங்குகளால் பினைத்து ஏதேனுமோர் இடத்தில் அடைத்து வைத்துவிடலாம் என்று ஆலோசனை கூறினார்கள். ஆனால் அவர்களில் சிலர் 'முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் அவர்களை விடுவித்துக் கொண்டு சென்று விடுவார்கள். நாம் அவர்களிடம் தோல்வியடைய நேரிடலாம்' என்று கூறியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

2)அண்ணலாரை நாடு கடத்திட வேண்டும் என்று மற்றோர் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் அண்ணலார் (ஸல்) எங்கு சென்றாலும் அங்கும். அவர்களை பின்பற்றுவோர் உருவாகி விடுவார்கள் அவர்களுடைய இயக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே சென்றுவிடும் எனபதால் இந்தத் திட்டமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இறுதியில் அபூஜஹ்ல் ஓர் ஆலோசனை கூறினான். ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞ்கர்கள் அனைவரும் சேர்ந்து அண்ணலாரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றுவிட வேண்டும்.

இவ்விதம் அவர்களைக் கொன்ற பழியில் எல்லாக் குலங்களும் சமமாக பங்குபெற வேண்டும். இதனால் பனீஹாஷிம்(அண்ணலாரின்) குலத்தாரால், இங்குள்ள எல்லாக் குலங்களுக்கும் எதிராக தனியாகப் போரிட முடியாது. என்றான் இந்த ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பல்வேறு குலங்களிலிருந்தும் விடுபட்டு இஸ்லாமியக் குழுவில் இணைந்து விட்டிருந்த இந்தச் சிறு தொகையினரான முஸ்லிம்களைக் கொலை செய்வதின் பொருள். அரபுலகத்தின் பல்வேறு குலங்களுடன் போர் தொடங்குவதாகிவிடும். ஏனெனில் அப்போது ஒரு தனி மனிதனைக் கொல்வது என்பது உண்மையில் அவன் சார்ந்துள்ள அந்தக் குலத்திற்கெதிரான போர்ப் பிரகடனம் செய்வதாகக் கருதப்பட்டு வந்தது அதனால்தான் ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு இளைஞனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அபூஜஹ்ல் சொன்னான்.

இறுதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஓர் இரவையும் நிர்ணயித்துக் கொண்டார்கள். இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த இரவின்போது அண்ணலாரின் இல்லத்தைச் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாலையில் அண்ணலார் (ஸல்) வெளியே வரும்போது தமது திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

அரபுகள் யாரும் இரவு நேரத்தில் யாரும் அறியாவண்ணம் ஒருவரது விட்டில் புகுந்து தாக்குவதை வெறுத்து வந்ததால் மேற்காணும் வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். (காட்டு அரபிகள் என்று சரித்திரம் சொல்லக்கூடிய அவர்களிடம் இருந்த நல்ல பண்புகள் கூட இப்போதுள்ள தலைவர்களிடம் இல்லை)

அல்லாஹ்வின் அருளால் அண்ணலாருக்கும் எதிரிகளின் இந்த இரகசியத் திட்டங்கள் தெரிந்துகொண்டு தானிருந்தன. இச்சூழ்நிலையில்தான் மக்கா நகரைத் துறந்து மதீனா நகரம் செல்லும்படி அண்ணலாருக்கு இறைக்கட்டளை வந்தது நபிகளார் எந்தத்தடையுமில்லாமல் மதீனா சென்றுவிட்டனர். ஆக இந்த முயற்சியிலும் தோல்வியடைந்ததால் அவர்களுக்கு கோபமும் வெறியும் இன்னும் அதிகமானது. எல்லாவற்றிலும் தோற்று நிர்கதியற்று நின்ற அவர்கள் கடைசியாக தனது கையாளாகாத தனத்தை வெளிப்படுத்த திட்டமிட்டனர். இருப்பினும் அவர்களால் குர் ஆன் கொடுத்த சவாலை எதிர்கொள்ள தைரியம் வரவில்லை.

4) அவதூறு செய்ய சதி
அல்லாஹ்வுடைய குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் விவாதப் பொருளாகிய செய்தி அரபுப் பகுதியை தாண்டிப் பரவிய போது ஹஜ்ஜுடைய நேரம் வந்தது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் ஒன்று கூடும் தருணத்தில் சொல்லப்படும் செய்தி உலகம் முழுவதும் போய்ச் சேரும் என்பதல் நபி (ஸல்) அவர்கள் அங்கு இஸ்லாத்தை எடுத்துச் செல்ல ஆயத்தமானார்கள். இதற்கு எதிராக அரபு மக்களும் திட்டம் தீட்டினார்கள். இதற்காக தங்களது மூத்த தலைவரும், சிறந்த அறிவாளியுமான வலீத் இப்னு முகீராவிடம் ஆலோசனை செய்யக் குழுமினர்.

உலகின் பல பாகங்களிலிருந்தும் வரக் கூடிய மக்கள் முஹம்மதைப் பற்றி எம்மிடத்தில் விசாரிக்கும் போது நாங்கள் அவரைப் பற்றி என்ன சொல்வது? எல்லோரும் ஒருமித்து கூறுமாறு எமக்கு ஒரு வழியைக் கற்றுத் தாரும் என்று அரபுகள் முகீராவிடம் கேட்டனர். அதற்கவர், நீங்கள் அவரைப் பற்றி முதலில் அபிப்ராயம் சொல்லுங்கள். நான் இறுதி முடிவு செய்கிறேன் என்று கூறினார்.
சிலர் கூறினர் : அவர் பைத்தியக்காரர் என்று சொல்லாமே' என்றனர்.
வலீது பதிலளித்தார் : அது தவறு, மக்கள் அவரைப் போய் சந்திக்கும் போது உங்கள் குட்டு வெளிப்பட்டு நீங்கள் சொன்னது பொய் என்று தெரிந்து விடும் என்றார்
மக்கள் கூறினர் : அவர் ஒரு கவிஞர் என்றோ ஜோசியக்காரர் என்றோ, ஷைத்தானுக்கு வழிப்பட்டு சில மறைவான விஷயங்களைக் கூறுகிறார் என்றோ கூறலாம் என்றனர்
வலீது பதிலளித்தார். இதுவும் தவறு. அவரோடு பழகும் போது நீங்கள் கூறியது அவதூறு என்று அறிந்து உங்கள் மீது வெறுப்புத்தான் மிஞ்சும். ஏனென்றால், உங்களிலேயே அரபுக் கவிதை இயற்றுவதில் என்னை விடத் திறமைசாலி வேறு யாருமில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன். அவர் சொல்வது போன்ற சொல் நயமும், கருத்து நயமும் செறிந்த வார்த்தைகளை எந்தக் கவிதையிலும் நான் பார்க்கவில்லை. (இந்த வார்த்தை குர் ஆனுக்கு எதிராக சதிதிட்டம் தீட்ட கூடியவர் சொன்னது)
பிறகு மக்கள் கேட்டனர்: வேறு என்ன தான் அவரைப் பற்றிக் கூறுவது?'
வலீது பதிலளித்தார்: அவர் ஒரு சூனியக்காரர். அவரது சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையிலும், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலும் பிரிவினை ஏற்படுத்துகிறார் என்று கூறுங்கள் மக்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
இந்தப்பிரச்சாரம் நபியையும், சஹாப்பக்களையும் மிகவும் பாதித்தது அதற்காக அல்லாஹ் 68:1,16 வரையுள்ள வசனங்களை அருளினான்

68:1. நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
68:3. இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
68:5. எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
68:6. உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
68:7. உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
68:8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
68:9. (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
68:10. அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
68:11. (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
68:12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.
68:13. கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.
68:14. பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்
68:15. நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், ''இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்'' என்று அவன் கூறுகின்றான்.
68:16. விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.

நபிகளுக்கு அறிவுரையும் ஆறுதலும் தரக்கூடிய ஆயத்துகளாக அது இருந்தன.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

No comments: