Thursday, June 22, 2006

வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.

மதம் அல்லது மார்க்கம் என்பது மனிதனை மனிதனாக மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சக மனிதனை மிருகமாகவும் காட்டுமிராண்டியாகவும் அல்லது தன்னை விட மட்டமாகவும் கருதுவதை அல்லது அந்த கருதுதலை நியாயப்படுத்தி கடமையாக்குவதை ஒருபோதும் மார்க்கமாகக் கருதமுடியாது.

ஏனெனில் அது மனிதனை நற்சிந்தனைக்கு பதிலாக தீய வழிக்கே இட்டுச் செல்லும் மத நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. அப்படி தன் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அந்த மதத்தை மற்றவர்கள் விமர்சிப்பதும் அதற்கு பதில் இல்லாமல் விமர்சிக்கக்கூடிய விமர்சனத்திற்கு பதில் தராமல் விமர்சிக்கக்கூடியவர்களை கெட்டவர்கள் என்று தூற்றுவதும் எந்த விதத்தில் நியாயம்.

ஒரு கடைக்காரன் தன் பொருள் நல்லபொருள் என்று சொல்லாமல் பக்கத்து கடைக்காரனின் பொருள் மோசமானது என்று சொல்வது எப்படி சரியில்லாத வழிமுறையோ அதுபோலத்தான் இதுவும்.

இதை நன்கு சிந்திக்கக்கூடியவன் என்ன செய்வானோ அதைத்தான் நான் செய்தேன். இந்து மதத்திலிருந்து விரக்தியுற்று பிரிந்தவர்கள்தான் நாத்திகர்கள். அதாவது தமிழகத்தின் பூர்வீக குடிமக்கள். அதாவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள். இயற்கையை கடவுளாக வணங்கக்கூடியவர்கள் (தமிழர்கள்) ஆனால் அவர்களிடம் தற்போது பாக்கியுள்ளது என்ன?

தமிழர்திருநாள் பொங்கல் மட்டுமே பாக்கியுள்ளது. அதாவது போகிப்பண்டிகை, பொங்கல்திருநாள், மாட்டுப்பொங்கல் இந்த மூன்று திருநாள்களை தவிர அந்த தமிழர்களை கடந்து செல்லக்கூடிய வருடத்தின் 362 நாட்களும் யாரோ (வந்தேறிகள்) நம்மீது புகுத்தியது; திணித்ததாகும். இதை ஒத்துக்கொள்ளாத எந்த தமிழ்மனம் உண்டு?

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு. அந்த இனமும் அதற்கான குணமும் இப்பொழுது எங்கே? வரதட்சணை கொடுத்து திருமணம், மகளின் பூப்புனித நீராட்டுவிழா, விநாயகர் ஊர்வலம், இறந்தவர்களுக்கு திவசம், நல்ல நாள் பார்ப்பது இதுபோல் இன்னும் பலபல ……. இவையெல்லாம் தமிழகத்துக்குள் புகுந்தது எப்படி? எப்பொழுது? உண்மை நிலை என்னவெனில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, படிக்காத மேதை காமராஜர் ஆகியோருக்கு பிறகு ஒரு தமிழன் கூட தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதுதான் உண்மை. தந்தை பெரியாருக்கு பிறகு அந்த பாசறையில் வந்த தலைவர்கள் எங்களுக்கு நாற்காலி கிடைத்தால் போதுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த சமூகத்திற்குள் அவர்களால் பிடித்து நிற்க வழி தெரியவில்லை. அல்லது வழி நடத்த தகுதியற்றவர்களாக மாறிவிட்டனர்.

தமிழுக்கென்ற மரியாதையை தமிழன் கொடுக்கவில்லை. அதனால் வந்தேறிகள் தமிழகத்தில் புகுந்து கொண்டு தமிழர்களுக்காகப் போராடுகின்றோம் என்ற போர்வையில் தங்களின் சித்தாந்தத்தை உள்ளே வாழைப்பழத்தில் விஷ ஊசியை ஏற்றுவதைப் போல் ஏற்றி நாசமாக்கி விட்டனர். விளைவு? அந்த இனத்தையும் குணத்தையும் யாராவது எங்காவது கண்டால் தயவு செய்து தமிழ்மணத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்ற நிலையாகி விட்டது.

அதன் விளைவில் ஒன்றைத்தான் இன்று தமிழர் சமூகம் வரதட்சணை என்ற பெயரில் அனுபவிக்கிறது. இதனைக் கொடுக்க முடியாமல் எம் சகோதர கன்னிப்பெண்கள் ஜன்னலோர தேய்நிலவாக கண்ணீரில் குளிக்கின்றனர். ஆச்சாரம் என்ற பெயரில் யாரோ அவிழ்த்துவிட்ட அனாச்சார கட்டுக்கதைகளால் சம்பாதிக்கக்கூடிய குறைந்த தொகையில் கணிசமான ஒரு பகுதியை கோவிலில் அர்ச்சனைக்காக அவாள்களிடம் எதிர்பார்ப்பின் கண்ணீரோடு தாரைவார்க்கின்றான் தமிழன். தமிழன் புரிந்து கொள்ளவேண்டும் இந்த ஒட்டுண்ணிகளின் வயிறு வளர்க்கும் தந்திரங்களை. தமிழா உன்னை நீ புரிந்துகொள்.

வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..!!

அதற்காக,

இதோ இருகரம் நீட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது இஸ்லாம்.

No comments: