நீண்ட நாட்களுக்கு பிற்கு மீண்டும் சந்திக்க வைத்த அந்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்
நான் ஊருக்கு சென்றிருந்த பொழுது நடந்த ஒரு சுவையான அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்வதன் மூலம் யாருக்கேனும் அறிவுக்கண் திறக்குமானால் அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி சந்தோசம் அடைகின்றேன்.
இஸ்லாம் என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் உள்ள கசடுகளை கொள்கை ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் துடைத்து எடுக்கின்றது. அதனால் தான் இஸ்லாம் இந்த பூமியில் இன்னும் வெற்றி என்னும் மணிமகுடத்தோடு உலாவருகின்றது.
நானும் என் தம்பியும் ஒரு நாள் ஞாயிற்று கிழமை இரவு சுமார் எட்டு மணியிருக்கும் வெளியூர் சென்றுவிடு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம் எங்கள் வீட்டின் முன்னால் ஒரே மக்கள் கூட்டம் நம் வீட்டில் ஏன் இப்படி கூட்டம் என தம்பியிடம் கேட்டேன் இன்று ஞாயிற்று கிழமை தமிழகத்தில் இன்று இரவு படம் உள்ளது அதனால்தான் இந்த கூட்டம் என கூறினார். எங்கள் குக்கிராமத்தில் உள்ள அந்த சிறிய தெருவில் உள்ள வீடுகளில் 75% வீடுகள் அரிசன மக்கள் தான் குடியிருக்கின்றனர். ஆனால் அந்த தெருவில் யார் வீட்டிலுமே டெலிவிஷன் இல்லையென்று அன்றுதான் தெரிந்து கொண்டேன்.
நான் அவர்களின் அருகில் சென்று ஏன் எல்லோரும் வாசலில் அமர்ந்துள்ளீர்கள் உள்ளே வீட்டின் வராண்டாவில் இருந்து படம் பார்க்கலாமே என்றேன் அதற்கு ஒரு சிறுவன் எழுந்து ஐயா(அதாவது என் தந்தை) எங்களை வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள். அதனால் தான் வெளியில் அமர்ந்துள்ளோம் என்றான். நான் வீட்டிற்கு உள்ளே சென்று டிவியை இழுத்து உள்ளே வைத்துவிட்டு அனைவரையும் வரண்டாவில் இருந்து படம் பார்க்கச் செய்தேன். (இந்துக்களின் முறைப்படி நடந்த என் வலுக்கட்டாய திருமணத்தில் சட்டப்படி ஐயர் மந்திரம் ஓதி தரவேண்டிய தாலியை அந்த அரிசன சிறுவனைதான் தாலியெடுத்து என் கையில் தரச் சொன்னேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.) படம் முடிந்ததும் கூடியிருந்த அந்த மக்களிடம் நீங்கள் ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கின்றீர்கள்.
மனிதர்கள் அனைவருமே பிறப்பால் சமமே நான் உயர்(ந்ததாகக் கருதப் படும்) குலத்தில் பிறந்தது என் தவத்தினாலன்று; நீங்கள் தாழ்ந்த(தாகக் கருதப்படும்) குலத்தில் பிறந்தது உங்கள் தவறினாலன்று. இவையெல்லாம் மனிதனின் குறும்புத்தியாகும் மனித சமுதாயம் அனைத்துமே மண்ணால் படைக்கப் பட்டதுதான் நம்மை படைத்த இறைவன் உங்களையும் என்னையும் மண்ணால் தான் படைத்துள்ளான் இதில் உயர்வு தாழ்வு எப்படி கற்பிக்க முடியும்.
உண்ணுவதும் உறங்குவதும் நீங்களும் நாங்களும் ஒரே மாதிரிதான் உங்கள் உடம்பிலும் என் உடம்பிலும் ஒரே இரத்தம் தான். நீங்கள் குழந்தை பெறுவதும் நாங்கள் குழந்தை பெறுவதும் ஒரே முறையில் தான் இதில் எங்கிருந்து ஏற்றத்தாழ்வு வந்துள்ளது. ஏன் இந்த முரண்டு பிடிக்கும் மனப்பான்மை. என்றெல்லாம் சுமார் பத்து நிமிடம் உரையாற்றி விட்டேன் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர். அதுவரை ஒன்றுமே பேசாமல் இருந்த என் தந்தை இது மனிதர்கள் வாழுகின்ற வீடு இங்கு குல தெய்வம் உள்ளது அது கோபித்துக் கொண்டால் என்ன செய்யமுடியும் என்று பேச ஆரம்பித்தார் அப்பொழுது தான் என் வீட்டில் நான் நிற்கின்ற ஞாபகமே எனக்கு வந்தது. பிறகு வரண்டா முழுவதும் கழுவி விட்டுத்தான் என் பெற்றொர் உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலையில் தெரு வழியாக வயலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன் வாசலில் நின்று கொண்டிருந்த அரிசன பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் அண்ணே இங்கே வாங்க என்று அழைத்தாள் நான் அருகில் சென்றேன் நீங்கள் நேற்று என்னன்னமோ பேசுனீங்க என் மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்துச்சி அனா அதெ நீங்க செய்வீங்களா? என கேட்டாள் என்ன செய்ய வேண்டும் என கேட்டேன் நீங்கள் எங்கள் வீட்டிற்குள் வந்து அமர்ந்துவிட்டு செல்லுங்கள் போதும் என்றாள்.
நான் அவர்களின் வீட்டிற்குள் அடுப்படியில் சென்று அவர்களின் சாப்பாட்டு தட்டை எடுத்து அவர்களின் சாப்பாட்டு பானையிலேயே சோறும் எடுத்து உண்டேன் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் தாய் ஓடிவந்து தம்பி வெளியிலே போப்பா உங்கள் மேல்ஜாதிகாரர்கள் பார்த்தால் எங்களை ஊரைவிட்டே ஒதுக்கி விடுவார்கள் என்று சொல்லி என்னை வெளியில் அனுப்பிவிட்டனர்.
இதை என்னை வீட்டிற்குள் அழைத்த அந்த பெண்ணின் தந்தையும் என் தம்பியும் வாசலில் நின்று பார்த்துக்கொண்டே நின்றார்கள் மௌனிகளாக......!
இதில் என் மனதில் எழக்கூடிய கேள்வி என்னவென்றால் இந் நிலைக்கு யார் காரணம்....?
1) தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கின்ற அந்த அப்பாவி மக்களா..?
2) இவர்களை இந்நிலையிலேயே வைத்திருக்கின்ற அந்த சமூகமா...?
ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்
3 comments:
சகோதரரே!
உங்கள் கேள்விக்கான பதில் அதிலேயே உள்ளது!
//மேல்ஜாதிகாரர்கள் பார்த்தால் எங்களை ஊரைவிட்டே ஒதுக்கி விடுவார்கள்// என்ற பயம் தான்.
எனவே //1) தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கின்ற அந்த அப்பாவி மக்களா..?// இந்த கேள்வியே அர்த்தமற்றதாக படுகிறது.
அவர்களை அவ்வாறு தாழ்த்திக் கொள்ள நிர்பந்திக்கப் படுகிறார்கள். சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம்(!) கூட (இருப்பதும் போய் விடக் கூடாது) நஷ்டப் பட்டு விடக் கூடாது என்ற பயம் தான் காரணம்.
இதனைக் களைய சிந்தனை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு எதிராக போராட - உங்களைப் போன்று - மேல்ஜாதி என்று கூறிக் கொண்டிருப்பவர்களிடையிலிருந்து போராட ஊருக்கு இரண்டு பேர் இருந்தால் போதும். இன்ஷா அல்லாஹ் இக்கொடுமையை மாற்றி அமைக்கலாம்.
"முயற்சிப்(போராடு)பவர்களுக்கு மட்டுமே பிரதிபலன் கைமேல் கிடைக்கிறது"!
அன்புடன்
இறைநேசன்
தீண்டாமையைப் மையப் படுத்திய நெகிழ்ச்சியான இப்பதிவுக்குப் பின்னால், பிறமதக் கொள்கை மற்றும் கலாச்சாரத்தில் ஊறிப்போனப் பெற்றோருடன் இணைந்தே வாழும் அறப் போராட்ட வாழ்க்கையும் அடங்கியுள்ளது.
இம்மாதிரி, ஒரு முன்மாதிரி முஸ்லிமின் வாழ்க்கை இனிமையானது - எத்துணைக் கடினமானாலும்.
நல்வாழ்த்துகள் சகோதரரே!
இவை அல்லாஹ் எனக்கு அளித்த பாக்கியமாகும் அவன் நாடியவர்களுக்கு மட்டுமே கொடுக்கும் பிரத்தியேக சந்தர்பமாகும் புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கே
Post a Comment