Tuesday, September 20, 2005

உண்மை முஸ்லிம்

புகழ் அனைத்தும் வல்ல ரஹ்மான் ஒருவனுக்கே..!!!


ஒரு மனிதன் தன்னை முஸ்லிம் என்று கூறுகின்றான் என்றால் அவன் மறுமையில் சொர்க்கம் வேண்டும் என்று நம்பியிருக்கின்றான் என அர்த்தம். இந்த நம்பிக்கையில்லாத ஒரு மனிதன் நிச்சயமாக முஸ்லிமாக முடியாது.
அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் '' யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகின்றாரோ அவர் சொர்க்கம் புகுவார்'' என்று கூறினார்கள். இதையே (முஸ்லிமாக வாழுங்கள் என்பதையே) நபிமார்கள் அனைவரும் தன் வாழ்நாளில் தான் சார்ந்த சமூகத்திற்கு உபதேசித்தார்கள் என்பதையும் குர் ஆன் முழுவதும் காண கிடைக்கின்றது.


3:67.இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. என்று அல்லாஹ்வே சான்று கூறுகின்றான்.
2:128.எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்


2:132.இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்


2:133.யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு,உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம் எனக் கூறினர்.


3:102.நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.


10:72.நூஹ் ஆனால், நிங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை ; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன் (என்று கூறினார்.


16:102.(நபியே!)ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார் என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.


ஆக நபிமார்கள் அனைவருமே முஸ்லிமாக வாழுங்கள் என்றே கூறினார்கள். இப்படி முஸ்லிமின் கோட்டைக்குள் ஆன்மாவை அர்ப்பணித்துக் கொண்டவரின் அடிப்படை சிந்தனைகள் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிவோம்.

சலாம்(பதில்)சொல்வது

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நீங்கள் நம்பிக்கையாளராக ஆகாதவரை சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. உங்களில் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை நீங்கள் முழுமையான (பூரணமான) நம்பிக்கையாளராக ஆக முடியாது. உங்களுக்கு ஒன்றை நான் ஏவுவதாக இருந்தால், உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்பவும், இன்னும் அன்பு செலுத்தும்படியும் தான் நான் கூறுவேன். ஸலாத்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் கூறுங்கள், நீங்கள் ஸலாம் உரைக்கக் கூடிய நபர் அறிந்தவராகவோ அல்லது அறியாதவராகவோ இருப்பினும் சரியே!


ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதாக, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள் : இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உணவளியுங்கள், இன்னும் உங்களில் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்று பதிலளித்தார்கள்.


அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இறைவனுக்கு மிக நெருக்கமானவர் யாரென்றால், உங்களில் முதலில் ஸலாம் கூறுகின்றவரே இறைவனுக்கு மிக நெருக்கமானவர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஸலாம் என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது, அதனை இறைவன் இந்தப் பூமியின் மீது இறக்கி வைத்தான். எனவே, அந்த ஸலாத்தை நாம் இந்தப் பூமியில் பரப்ப வேண்டும். ஒருவர் மற்றவருக்கு ஸலாம் உரைக்கும் பொழுது, இறைவனிடத்தில் அவரது தகுதி உயர்த்தப்படுகின்றது. சபையில் உள்ளவர்கள் ஸலாம் உரைப்பவரது ஸலாத்திற்குப் பதிலுரைக்கவில்லை என்று சொன்னால், அங்கிருக்கின்ற மனிதர்களை விட மிகச் சிறந்த படைப்பான (மலக்குமார்கள் - வானவர்கள்) அவரது ஸலாத்திற்குப் பதில் கூறுகின்றார்கள். (முஸ்னது பஸ்ஸார், தப்ரானி)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :உங்களில் கஞ்சத்தனமிக்கவர் யாரென்றால், ஸலாத்தைப் பரப்பாமல் கஞ்சத்தனம் செய்கின்றவரே!திருமறைக் குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான் : (எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (4:86)

கை, நாவைப் பேணுதல்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார். அவர் மிகவும் கெட்டவர் எனக் கூறிய நபி(ஸல்), அவருக்கு அனுமதியளியுங்கள் என்றனர். அவர் வந்ததும், அவரிடம் மென்மையாகப் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவரைப் பற்றி ஒரு விதமாகக் கூறிவிட்டு, அவரிடம் மென்மையாகவும் பேசினீர்களே என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆயிஷாவே! ஒருவனது (கை மற்றும் வாயால் ஏற்படும்) தீங்குக்கு அஞ்சி மக்கள் எவனை (விமர்சிக்காது) விட்டு விடுகிறார்களோ அவன்தான் மறுமை நாளில் மனிதர்களின் மிகவும் கெட்டவன் என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்
எவரது நாவால், கரத்தால் ஏனைய முஸ்லிம்களுக்குத் தீங்கு ஏற்படவில்லையோ அவர் தான் முஸ்லிம் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மக்களிடம் நெருக்கமாகவும் மென்மையாகவும் எளிமையாகவும் நடப்பவருக்கு நரகம் ஹராம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த்(ரலி) நூல்கள்:அஹ்மத்


நல்லவற்றில் எதையும் அற்பமாக நினைத்து விடாதே! உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே என்பதும் நபிமொழி. அறிவிப்பவர். அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்


மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது எது என்றால் நாக்கு என்று சொல்லலாம். ஒருவரிடம் தன்னடக்கம் இருக்க வேண்டுமென்றால் அவனிடம் நாவடக்கம் இருக்க வேண்டும். இந்த நாவை எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதன்படியே முடிவு இருக்கும். இந்த நாக்கில் நல்ல பெயர் கிடைத்து சிறந்த பெயரை வாங்கி மறுமையிலும் சிறப்பிடத்தைப் பெறுகின்றார்கள். சிலர் இந்த நாவால் தான் முறையற்ற வழியில் பேசி, மனிதர்களில் மட்டமான பட்டியலில் இடம் பெறுவது மட்டும் அல்லாமல், மறுமையில் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்றார்கள். இப்படிப்பட்ட நாவைப் பற்றி அல்லாஹ் திருமறையிலும் நபி தன் மொழியிலும் இவ்வாறு கூறியுள்ளார்கள். எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடர வேண்டாம். நிச்சயமாக மறுமையில் செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே அதனதன் செயல் பற்றிக் கேள்வி கேட்கப்படும். (17:36)
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, எவர்களுடைய நாவினாலும் கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பைப் பெறுகின்றார்களோ அவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

தற்பெருமை
பெருமை (கிப்ர்) என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உரியது. அதை அவனுடைய படைப்பினங்கள் சொந்தப்படுத்திக் கொள்ள முடியாது.ஒரு முஸ்லிமிற்கு (கட்டுப்பட்டவனுக்கு) தற்பெறுமை என்பது அறவே கூடாத விஷயமாகும் தான் என்ற அகங்காரம் இப்லீஸுக்கு வந்ததால், அவன் சிறுமையடைந்தான் நிராகரிப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34)
இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவன் சுவனம் புக மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் தன் ஆடை அழகாக இருப்பதையும் தனது காலணி அழகாக இருப்பதையும் விரும்புவது பெருமையாகுமா? என ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பெருமை என்பது உண்மையை மறைப்பதும், மக்களை கேவலமாகக் கருதுவதும் ஆகும். (நூல் : அஹ்மத் அறிவிப்பாளர் : அம்ரு பின் ஷுஐப் (ரலி) ஹதீஸ் எண் : 6390


சில அமைப்பிலோ ஜமாஅத்திலோ இருப்பவர்கள் தான் சொர்க்கத்திற்கு உறியவர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்ன 73 கூட்டத்தில் சொர்க்கம் போகக்கூடிய கூட்டத்தவர்கள் என்றும் அதனால் இருந்தால் இந்த அமைப்பில் இருங்கள் இல்லையேல் எதிர்; அமைப்பில் இருங்கள் என்றெல்லாம் பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றது தனக்கு பின்னால் கொடிப் பிடிக்க உள்ள கூட்டத்தை தனக்கு பின்னாலேயே நிறுத்துவதற்கு எடுத்த அரசியல் தந்திரமாகும். இன்னார் தான் 73வது கூட்டத்தார் என்று எந்தக் கூட்டத்தையும் கூறவே முடியாது. ஏனெனில் 'இறைவா.. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக..' (அல் குர்ஆன் 1:6) என்று இறைவன் பிரார்த்திக்க சொல்கிறான். நாம் நேர்வழியில்தான் இருக்கிறோம் என்று ஒருவனுக்கு உறுதியாகி விட்டால் இந்த பிரார்த்தனை அர்த்தமில்லாமல் போய்விடும். ஏன், அழுத்தமில்லாமல் கூட போய்விடும். இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம் எவரும் நான் நேர்வழியை அடைந்து விட்டேன். 73வது கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. சொல்லிக் கொள்ளவும் கூடாது.
ஆனால் துரஷ்டவசமாக பிரிந்து செல்லக்கூடிய ஒவ்வொரு கூட்டமும் இந்த ஹதீஸைத்தான் தன் செயல்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். அல்லாஹ் மனிதனின் சிந்தனையை பற்றி கூறுகையில்
(என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! ..அவர்கள் சொல்லை–(நல்லுபதேசத்தைச்) செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர். (39:17,18)
என்றும்,
நபி (ஸல்) அவர்கள் கூறுகையில் முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும், கல்வியை தேடுவது கட்டாய கடமையாகும் என்றும் உள்ளது. மேலும்
எவர் மார்க்க கல்வியை கற்க செல்கிறார்களோ, அவர் திரும்பும் வரையில் இறைவழியில் செல்பவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அறிவிப்பவர்: அனஸ்(ரலி) - நூல்: திர்மிதி
எவருக்கு இறைவன் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்க அறிவை நல்குகிறான் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம் : அறிவிப்பாளர் மூஆவியா(ரலி) என்று அறிவை வளர்ப்பதற்காக இஸ்லாம் சிந்தனையை தூண்டும் பொழுது,
வேண்டாம் வேண்டாம் வேறு யாருடைய பேச்சையும் கேட்காதே என்று கூக்குறலிட்டு கூச்சலிடுவது ஏனென்று சிந்திப்பவர்களுக்கு புரியாமலில்லை.
இஸ்லாம் மூட நம்பிக்கையை தரைமட்டமாக்கி சிந்தனையை சுதந்திரமாக்கியிருக்கும் போது, சில அறிவு சூனியங்கள் இந்த அமைப்பில் உள்ளவர்கள் வேறு எந்த அமைப்பிற்கும் போகக் கூடாது என சிந்தனையை சூனியமாக்குவதும் நான் மேலே கூறியது போல் தனக்கு பின்னால் கொடிப் பிடிக்க உள்ள கூட்டத்தை தனக்கு பின்னாலேயே நிறுத்துவதற்கு எடுத்த அரசியல் தந்திரமேயல்லாது வேறென்னவாக இருக்க முடியும்?
இத்தகையவர்களை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
39:9: ''அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.
7:179 .நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
நிகழ்காலத்தில் உள்ள தலைசிறந்த மார்க்க அறிஞர்களை எல்லாம் குறை கூறக்கூடிய இவர்கள் தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் எனக் கூறாதீர்கள் (53:32) என்று அல்லாஹ் எச்சரிப்பதை இவர்கள் சுகமாக மறந்துவிட்டு நாங்கள் தான் சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்பது பெறுமையடிப்பின் உச்ச கட்டமாகும்.
மனிதன் என்பவன் தவறு செய்யக் கூடியவன் என்ற எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா?( 2:85 )என்ற வசனத்திற்கு இலக்கானவர்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் பெருமையடிப்பவர்களின் நிலையைப் பற்றி கூறும் போது : (உலகில்) பெருமையடித்தவர்கள் அனைவரும் மறுமை நாளில் (உடலமைப்பால்) சிற்றெறும்புகளைப் போன்று மனிதத் தோற்றங்களில் எழுப்பப்படுவர். அற்பமான அனைத்துப் பொருட்களின் காலடியிலும் அவர்கள் மிதிபடுவர். இறுதியில் பவ்லஸ் அல்லது பூலஸ் என்ற நரகச் சிறையில் நுழைவர். (அதில்) அவர்களை ஆகக் கொடிய நெருப்பு சூழ்ந்து கொள்ளும். நரகவாசிகளிடமிருந்து வழிந்தோடும் வியர்வை, சீழ் மற்றும் இரத்தம் ஆகியவற்றை அவர்கள் புகட்டப்படுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம். என்பதை மட்டும் புத்தியிருந்தால் சிந்திக்கட்டும்.

சக முஸ்லிமை (மனிதனை) கண்ணியபடுத்துதல்
உலக வரலாற்றில் பொன்னேடுகளால் பொறிக்கப்பட்ட அல்hஹ்வின் தூதர் முஹமது (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் பிதாவில்.. ..இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் கண்ணியத்திற்குரியனவாய் விளங்குகின்றதே அது போன்றே உங்கள் இரத்தமும் உங்கள் செல்வமும், மானமும் இறுதித் தீர்ப்புநாள் வரை கண்ணியத்திற்குரியவை. ஒருவருக்கொருவர் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்... இந்த ஒரு விஷயத்தில் இந்த முஸ்லிம் உம்மத்தில் உள்ள மார்க்க அறிஞர்கள் என்ற போர்வைக்குள் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர். ஒருவருக்கொருவர் மற்றவரின் கண்ணியத்தையும் மரியாதையையும் சரமாரியாக சானியையும், சேற்றையும் அள்ளி மார்க்கம் என்ற பெயரிலும் சமூக சேவை என்ற பெயரிலும் பூசிக்கொள்வதை நிகழ்காலத்தில் நாம் கண்கூடாக காண்கின்றோம். அதனால் தான்; மாற்றுமதத்தவர்களுக்கு எங்களை பார்க்காதீர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பாருங்கள் என்று கூறுகின்றார்களே என்னவோ தெரியவில்லை.

முடிவுரை
நாளை கப்ரில் அடக்கம் செய்துவிட்டு கொள்கைவாதி, இயக்கவாதிகள் எல்லாம் திரும்பிய பிறகு, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ..அப்போது அவரிடத்தில் முன்கர் நகீர் என்ற இரண்டு மலக்குகள் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியாரை நோக்கி பின்வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.
உனது இறைவன் யார் ?
உனது மார்க்கம் என்ன?
உன்னிடத்தில் (மார்க்கத்தை போதிக்க)அனுப்பப்பட்டவர் யார்?
நீ அதனை எவ்வாறு அறிந்து கொண்டாய்?
நிச்சயமாக இந்த கேள்வி தான் கேட்கப்படுமேயல்லாது எந்த இயக்கத்தில் இருந்தாய், எந்த மத்ஹப்புக்காக பணியாற்றினாய், எந்த இமாமின் அல்லது எந்த மார்க்க அறிஞரின் சொல் கேட்டு அமல் செய்தாய் என்றெல்லாம் கண்டிப்பாக கேட்கப்படாது என்பதை இயக்க பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
6:161. (நபியே!) நீர் கூறும்; மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
6:162 நீர் கூறும்; மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
6:163. அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லீம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). 72:14. இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.


அப்படிப்பட்ட அல்லாஹ்வின் நேர்வழி,முஸ்லிமான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வல்ல ரஹ்மானிடம் இருகரமேந்துவோம்.

No comments: