அன்புள்ள சகோதரர்களே!
இளமைப்பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்வின் நிகரற்ற பருவமாகும். அதனால்தான் 'இளம்கன்று பயமறியாது' என்பார்கள். எந்த ஒர் உத்வேகமும் எளிதில் உட்கொள்ளும் பருவமாகும் இளைஞர் பருவம்.

அந்த நேரத்தில் உலக விஷயம், சமுதாய விஷயம் எனப் பல விஷயங்களையும் விவாதிப்போம். அப்பொழுதே எங்களுடைய சமுதாயச் சிந்தனைக்கு உரமாக இருந்தவர் தி.க சிந்தனையாளரான எங்கள் உடற்பயிற்சி ஆசிரியர். சாமி கும்பிடுவதிலிருந்து எங்களை அவர் எப்பவோ தூரமாக்கியிருந்தார். கோயில் பூஜாரியின் மகனான என்னையும் ஆதி திராவிடச் சகோதரர்களான என் நண்பர்களையும் ஓரணியில் நிறுத்தியதில் என் ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு. அவர்தான் எங்களுக்கு எல்லா மதங்களையும் படித்து ஆராய வேண்டும் என்ற சிந்தனையையூட்டினார்.
அதன்பிறகு எனக்குச் சில இந்துமதப் புத்தகங்களும் கிறிஸ்தவமதப் புத்தகங்களும் கிடைத்தன. ஆனால் இஸ்லாமியப் புத்தகத்தை என்னுடைய இஸ்லாமிய நண்பனிடம் கேட்டதற்கு, "நீங்களெல்லாம் படிக்கக்கூடாது" எனச் சொல்லி அதனைத் தர அவன் மறுத்துவிட்டான். அவனுடைய அறியாமையும் மறுப்பும் அப்போது எனக்கு வருத்தமளித்தது. பிறகு நான் வளைகுடாவிற்கு வந்து அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவுடன் எங்கள் ஊர் ஜமாத்துக்குக் கடிதம் எழுதி விஷயத்தை அறிவித்தேன். அது அவனுக்குத் தெரிந்தவுடன், "மச்சான்(எங்கள் ஊர் பக்கம் மாமா மச்சான் என்ற முறையில் தான் பழகுவோம்) என்னை மன்னிச்சுக்கோடா... அன்றே நீ குர்ஆனை கேட்டாய். ஆனால் நான் அறியாமையில் உனக்கு கொடுக்கவில்லை. அதன் மூலம் நீ இன்றுவரை இஸ்லாத்திற்கு வரவிடாமல் தடுத்த பாவியாகிவிட்டேன். அன்று நான் குர்ஆனைக் கொடுத்து இருந்தால் இன்ஷா அல்லாஹ் அன்றே நீ இஸ்லாத்திற்கு வந்திருக்கக்கூடும்" என அறியாமையின் ஆதங்கத்தை எனக்கு எழுத்தால் வடித்திருந்தான்.
சரி, எங்கள் வாதங்கள் எப்படிச் செயல்வடிவம் பெற்றன என்ற விஷயத்திற்கு வருகின்றேன். சமுதாயத்தில் உள்ள மூடநம்பிக்கை, தீண்டாமை போன்றவைகளை எதிர்ப்பதில் நம்முடைய பங்களிப்பு எப்படியிருக்க வேண்டும் எனவும் மணிக்கணக்காக நாங்கள் விவாதித்திருக்கிறோம். அதில் உருத்திரிந்து வந்தது தான் 'சபதம் எடுப்போம் ' எனும் நிகழ்ச்சி. சமூகத்தில் தாண்டவமாடுகின்ற ஒரே ஒரு கொடுமையை எதிர்த்தாவது நம் வாழ்நாளில் போராட வேண்டும் இல்லையேல் நாம் இந்த பூமியில் வாழ்ந்து அர்த்தமில்லை என உறுதிமொழியெடுத்தோம்.
அது போலவே மூவரில் ஒருவன், சாஸ்திர சம்பிரதாயத்திற்கும் வரதட்சணைக்கும் எதிராக சபதம் எடுத்தான். அதாவது, "நீ இந்தப் பெண்ணைத் திருமணம் செய்தால் உனக்குக் குழந்தை பிறக்காது. மேலும் உன்னுடைய தாய்க்கு உடனே மரணம் சம்பவிக்கும்" என ஜோசியம் என்ற பெயரில் மிரட்டப்பட்டதையும் மீறி அவன் தன் திருமணத்தை முடித்தான். அல்லாஹ்வின் அருளால் இன்றும் நன்றாக இருக்கின்றான்.
இரண்டாமவனோ சாஸ்திர சம்பிரதாயத்தை எதிர்த்து வெற்றி கொண்டான். ஆனால் வரதட்சணையில் கோட்டை விட்டான்.
ஆதலால் சகோதரர்களே, வார்த்தைச்சவாலை வாழ்க்கையாக ஏற்போம்; வெற்றி நமக்குப் படிக்கல்லாக மாறும்.