Tuesday, February 28, 2006

கலிபோர்னியா ஆனந்த் அவர்களுக்கு நல்வரவு!

என்னிடமிருந்து என் பிறப்பு தொடங்கி இன்றுவரையான எல்லாத் தகவல்களையும் ஐந்து கேள்விகளுக்குள் அடக்கி, பதில் தருமாறுக் கேட்டிருக்கின்றீர்கள். ஆனால், உங்களைப் பற்றி - குறைந்த பட்சம் - ஒரு மின்னஞ்சல் முகவரிகூட இல்லாமல் அனானியாக அறிமுகமாகி இருக்கின்றீர்கள். நீங்கள் பார்க்கக் கூடிய எத்தனை வெப்சைட்கள் பயடேட்டாவுடன் வலம் வருகின்றன.

என்றாலும் என்னைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் காட்டியிருக்கும் ஆர்வத்துக்கு நன்றி! உங்கள் ஆர்வத்துக்காகக் கொஞ்சம் அவல் தந்திருக்கிறேன், நீங்கள் உமிகூடத் தராத போதும்.

என்னுடைய பயோடேட்டாவை பற்றித் தெரிந்து கொள்வதைவிட ' இவன் ஏன் இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மாறினான்?' எனத் தெரிந்து கொள்வது உங்களுக்கும் உங்கள் சமூகத்திற்கும் பலன் தரும் என நினைக்கின்றேன்.

நம்முடைய உற்ற நண்பர் ஒருவர் நம்முடன் சரியாக பேசவில்லை என்றால் அதற்காக ஆ.... ஊ..... என்று கத்தாமல் அவர் நம்மோடு பேசாத அளவிற்கு நாம் என்ன தவறு செய்திருக்கின்றோம்? அல்லது அவர் மனம் நம்மிடம் ஏதோ குறைகண்டிருக்கின்றது எனச் சிந்திப்பதுதான் ஆக்கப்பூர்வமான, விவேகமான சிந்தனையாகும்.

என் தந்தை அடிக்கடி சொல்வார் "நாயின் மீது கல்லை எறிந்தால் அந்த நாய் கல்லைக் கடிக்காது... எறிந்த ஆளைத்தான் கடிக்கும்" என்று. அதனால் என்னைப் பற்றிச் சிந்திப்பதை விட என்போன்ற இளைஞர்கள் ஏன் மதம் மாறுகின்றனர் எனச் சிந்தியுங்கள். உங்களின் சிந்தனைக்காக ஒரு சில விஷயங்களை உங்களுக்கு சொல்கின்றேன் :

தந்தை பெரியார் "இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என்று ஏன் சொன்னார் என்பதைச் சிந்தியுங்கள்.

டாக்டர் அம்பேத்கார் 1 லட்சம் தொண்டர்களோடு இந்து மதத்திலிருந்து புத்த மதத்தை ஏன் தழுவினார் எனச் சிந்தியுங்கள். இன்ஷா அல்லாஹ் விடைகிடைக்கும் .

இவர்களைப் போன்றவர்கள் பணத்திற்காகத்தானே இஸ்லாத்தை ஏற்கின்றனர் என நீங்கள் முணுமுணுக்கக் கூடும். ஒரு வாதத்திற்கு அது சரியென்றே வைத்துக் கொண்டாலும் சாதாரண ஏழை மக்களைத் தானே அப்படி வாங்க முடியும்?

ஆனால், உலகத்தில் எந்த ஒரு இன்பத்தையும் பாக்கி வைக்காத, பெண்ணாலும் பொன்னாலும் கொடிகட்டிப் பறந்த கேட் ஸ்டீவன்ஸ் என்ற உலகப் புகழ்பெற்ற பாடகரை ( இன்றைய யூசுஃப் இஸ்லாம் என்பவரை) யார் விலை கொடுத்து, எவ்வளவுக்கு வாங்கினர்?

உடலியல் நிபுணரான டாக்டர் மாரிஸ் புகைலை எவ்வளவு கொடுத்து யார் விலைக்கு வாங்கினர் ?

மனித வரலாற்றில் சரித்திரத்தில் புகழ் பெற்ற 100 பேரின் வாழ்க்கையையும் அவர்கள் எடுத்துக் கொண்ட துறையையும் ஆராய்ச்சி செய்து, "அரேபியாவை சேர்ந்த எழுதப்படிக்கத் தெரியாத முஹமது நபிதான் முதலிடத்திற்குரியவர்" என கூறிய மைக்கேல் ஹார்ட் என்ற புகழ்பெற்ற ஆராய்சியாளரை யார் விலை கொடுத்து வாங்கினர்?

மேற்காண்பவற்றைப் பற்றிச் சிந்திப்பது என்னைப் போன்ற சாதாரண மனிதனின் பிறப்பைப் பற்றிச் சிந்திப்பதைவிட பன்னூறு மடங்கு பயனுள்ளதாகும். சிந்தித்துப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ் விடை கிடைக்கும்.

இருப்பினும் என் பயடேட்டாவை தருகின்றேன்:

தந்தை பெயர்: ஆதம்

தாயின் பெயர்: ஹவ்வா

சகோதரர்கள்: இரண்டு

உறவினர்கள்: 498 கோடி

பிறந்தது வளர்ந்தது மரணிக்கவிருப்பது: பூமியில்


இதற்கு மேல் எதுவும் தேவையில்லையென நினைக்கின்றேன்.

கருவூரிலே இருந்து மண்ணூரிலே பிறந்து காளையூரில் வளர்ந்து என்ற பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.

உங்களுக்கு நற்சிந்தனையையும் நேர்வழியையும் வழங்குவதற்கு நான் வணங்கும் இறைவனை வேண்டி முடிக்கிறேன்.

நன்றி!

அன்புடன்
ஸாலிஹ்(குலசை)

Wednesday, February 15, 2006

அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்புள்ள தமிழ்மணம் வாசகர்களுக்கு, உங்கள் சகோதரன் ஸாலிஹ் குலசையின் அஸ்ஸலாமு அலைக்கும்! (தங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.)

உலகத் தமிழ்மக்கள் இத்தனை பேரை ஒருசேர பார்க்கையில் மனம் குதூகலிக்கின்றது. இதனை எமக்கு அறிமுகப்படுத்திய சகோதரர்களுக்கு நன்றிகள் பல. இச்சேவையை வழங்கும் தமிழ்மணத்திற்கும் மிக்க நன்றி.

நான் ஆங்கிலத்திலோ, அல்லது தமிழிலோ புலமை பெற்றவனல்லன். என் வாழ்வில் ஏற்பட்ட சில அனுபவங்களை, என் எண்ண ஓட்டங்களை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்வதில் மன நிறைவு ஏற்படும் என்று கருதியதால் உங்களுடன் கைகோர்த்துள்ளேன். பல தமிழ் எழுத்தர்களுக்கு ஆதரவு அளிப்பது போன்று புதியவனான என்னையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

உங்கள் சகோதரன், சாலிஹ் (குலசை)

Monday, February 13, 2006

எடுத்த சபதம் முடிப்போம், தயங்காதே!

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!!

அன்புள்ள சகோதரர்களே!

இளமைப்பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்வின் நிகரற்ற பருவமாகும். அதனால்தான் 'இளம்கன்று பயமறியாது' என்பார்கள். எந்த ஒர் உத்வேகமும் எளிதில் உட்கொள்ளும் பருவமாகும் இளைஞர் பருவம்.

பள்ளிப்படிப்பின்போது நாங்கள் மூன்று பேர் இணைபிரியாத நண்பர்கள். அதனால் எங்களைப் பள்ளிக்கூடத்தில் 'மும்மூர்த்திகள்' என்றே அழைப்பார்கள். எங்களுடன் எங்கள் உடற்பயிற்சி ஆசிரியர், ஆக நாங்கள் நான்குபேரும் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் அருகில் உள்ள கண்மாயில்(ஏரியில்) சென்று விளையாடிவிட்டு, கொஞ்சநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு விடுதிக்குத் திரும்புவது வழக்கம்.

அந்த நேரத்தில் உலக விஷயம், சமுதாய விஷயம் எனப் பல விஷயங்களையும் விவாதிப்போம். அப்பொழுதே எங்களுடைய சமுதாயச் சிந்தனைக்கு உரமாக இருந்தவர் தி.க சிந்தனையாளரான எங்கள் உடற்பயிற்சி ஆசிரியர். சாமி கும்பிடுவதிலிருந்து எங்களை அவர் எப்பவோ தூரமாக்கியிருந்தார். கோயில் பூஜாரியின் மகனான என்னையும் ஆதி திராவிடச் சகோதரர்களான என் நண்பர்களையும் ஓரணியில் நிறுத்தியதில் என் ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு. அவர்தான் எங்களுக்கு எல்லா மதங்களையும் படித்து ஆராய வேண்டும் என்ற சிந்தனையையூட்டினார்.

அதன்பிறகு எனக்குச் சில இந்துமதப் புத்தகங்களும் கிறிஸ்தவமதப் புத்தகங்களும் கிடைத்தன. ஆனால் இஸ்லாமியப் புத்தகத்தை என்னுடைய இஸ்லாமிய நண்பனிடம் கேட்டதற்கு, "நீங்களெல்லாம் படிக்கக்கூடாது" எனச் சொல்லி அதனைத் தர அவன் மறுத்துவிட்டான். அவனுடைய அறியாமையும் மறுப்பும் அப்போது எனக்கு வருத்தமளித்தது. பிறகு நான் வளைகுடாவிற்கு வந்து அல்லாஹ்வின் அருளால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவுடன் எங்கள் ஊர் ஜமாத்துக்குக் கடிதம் எழுதி விஷயத்தை அறிவித்தேன். அது அவனுக்குத் தெரிந்தவுடன், "மச்சான்(எங்கள் ஊர் பக்கம் மாமா மச்சான் என்ற முறையில் தான் பழகுவோம்) என்னை மன்னிச்சுக்கோடா... அன்றே நீ குர்ஆனை கேட்டாய். ஆனால் நான் அறியாமையில் உனக்கு கொடுக்கவில்லை. அதன் மூலம் நீ இன்றுவரை இஸ்லாத்திற்கு வரவிடாமல் தடுத்த பாவியாகிவிட்டேன். அன்று நான் குர்ஆனைக் கொடுத்து இருந்தால் இன்ஷா அல்லாஹ் அன்றே நீ இஸ்லாத்திற்கு வந்திருக்கக்கூடும்" என அறியாமையின் ஆதங்கத்தை எனக்கு எழுத்தால் வடித்திருந்தான்.

சரி, எங்கள் வாதங்கள் எப்படிச் செயல்வடிவம் பெற்றன என்ற விஷயத்திற்கு வருகின்றேன். சமுதாயத்தில் உள்ள மூடநம்பிக்கை, தீண்டாமை போன்றவைகளை எதிர்ப்பதில் நம்முடைய பங்களிப்பு எப்படியிருக்க வேண்டும் எனவும் மணிக்கணக்காக நாங்கள் விவாதித்திருக்கிறோம். அதில் உருத்திரிந்து வந்தது தான் 'சபதம் எடுப்போம் ' எனும் நிகழ்ச்சி. சமூகத்தில் தாண்டவமாடுகின்ற ஒரே ஒரு கொடுமையை எதிர்த்தாவது நம் வாழ்நாளில் போராட வேண்டும் இல்லையேல் நாம் இந்த பூமியில் வாழ்ந்து அர்த்தமில்லை என உறுதிமொழியெடுத்தோம்.

அது போலவே மூவரில் ஒருவன், சாஸ்திர சம்பிரதாயத்திற்கும் வரதட்சணைக்கும் எதிராக சபதம் எடுத்தான். அதாவது, "நீ இந்தப் பெண்ணைத் திருமணம் செய்தால் உனக்குக் குழந்தை பிறக்காது. மேலும் உன்னுடைய தாய்க்கு உடனே மரணம் சம்பவிக்கும்" என ஜோசியம் என்ற பெயரில் மிரட்டப்பட்டதையும் மீறி அவன் தன் திருமணத்தை முடித்தான். அல்லாஹ்வின் அருளால் இன்றும் நன்றாக இருக்கின்றான்.

இரண்டாமவனோ சாஸ்திர சம்பிரதாயத்தை எதிர்த்து வெற்றி கொண்டான். ஆனால் வரதட்சணையில் கோட்டை விட்டான்.

ஆதலால் சகோதரர்களே, வார்த்தைச்சவாலை வாழ்க்கையாக ஏற்போம்; வெற்றி நமக்குப் படிக்கல்லாக மாறும்.

Thursday, February 02, 2006

தைரியமாக சொல் நான் முஸ்லிம்

இந்து மக்களுக்கு (குறிப்பிட்ட இனத்தவருக்கு) சமுதாய பிரச்சனையை எதிர்கொள்ளும் தைரியமில்லை ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் என்பார்கள் கடையில் சென்று யாரும் கடைக்காரன் தரும் பொருளை அப்படியே வாங்கிக்கொண்டு வந்துவிடுவதில்லை. தன் குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லையென்றால் உடனே பூசரியையும் கோடங்கிக்காரனையும் தான் நம்பியோடுகிறார்களேயல்லாது டாக்டரிடம் செல்பவர்கள் மிகவும் அரிதிலும் அரிது எனலாம்.
யானை தன் பலம் அறிந்தால் பாகனுக்கு அடிபணியாது என்பார்கள். அதுபோல் மனிதன் தன் பலத்தை முதலில் அறியவேண்டும். ஒரு மனிதனால் எங்கும் எப்படியும் வாழமுடியும் சுற்றுப்புற சூழலை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள மனிதன் முயற்சித்துக்கொண்டே இருக்கின்றான். தான் யாருக்கும் அடிமைப்பட்டு வாழவேண்டிய அவசியமில்லை என்று ஒரு மனிதன் தீர்மானித்தால் அதைத் தடுக்க எந்த அரசாங்கத்தாலும் முடியாது என்பதை உணரவேண்டும் இதற்கெல்லாம் தேவை தைரியம் மட்டும்தான்.
ஒரு குடிகாரன் தைரியமாக இந்த சமுதாயத்தில் வாழ முடிகின்றது ஒரு விபச்சாரி தைரியமாக இந்த சமுதாயத்தில் வாழ முடிகின்றது நீங்கள் இல்லையென்றல் என்னால் வாழவே முடியாது என்று சொன்னவள் கூட தன் கணவன் இறந்த பிறகும் இந்த பூமியில் உயிரோடு தைரியமாக வாழ்ந்துகொண்டிருப்பதை கண்கூடாக நாம் அன்றாடம் நம் வாழ்வில் காண்கின்றோம் என் தலை பணியுமென்றால் அது என்னைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே தான் என்று ஏன் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ முடியாது ?
தன் மனைவி தனக்காக உள்ள படுக்கையை வேறொருவனுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டாள் எனத் தெரிந்தும் அவளுடன் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் தைரியமாக வாழுகின்றான் கேட்டால் குழந்தைக்காக என்கின்றான் அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் நீ கொள்கைக்காக வாழ முடியாதா? கொள்கைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த புண்ணியவான்கள் வாழ்ந்த பூமியையா இந்த தமிழகம்.
அதனால் சகோதரனே உன் பரம்பரைக்கே சாதி இழிவு நீங்க வேண்டுமென்று உன் அடி மனதிலிருந்து நீ உண்மையிலேயே நினைக்கின்றாயென்றால் அது உன் மனதை வேதனைப் படுத்துகின்றதென்றால் உடனே புறப்படு நீ இஸ்லாத்தை நோக்கி அரசாங்கம் கொடுக்கும் உதவியும் சமூகம் உன்னை கேலிசெய்வதும் கொஞ்சகாலமே
உன் சந்ததிகள் உன்னை புகழ்வார்கள் இன்ஷா அல்லாஹ்
அதனால் தைரியமாக சொல் நான் முஸ்லிம்