Tuesday, November 29, 2005

அபிஸ்டு புத்தி வந்துடுத்தா ?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
மீண்டும் நம்மை சந்திக்கவைத்த அந்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.
இன்றும் தீண்டாமை என்ற பெயரில் எப்படியெல்லாம் மடத்தனமான காரியங்களை செய்கின்றனர் என்பதை பார்ப்போம்.
எங்கள் வீடு என்பது மிகவும் ஆச்சாரங்கள் நிறைந்த வீடு. சைவ சாப்பாட்டிற்கு ஒரு பாத்திரம். அசைவ சாப்பாட்டிற்கு ஒரு பாத்திரம் எனவும் தினமும் அதிகாலையிலேயே குளித்து பூஜை நடத்தும் வீடு. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது சாயங்காலம் தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் எங்கள் ஊர் கண்மாயில் (ஏரியில்) கபடி விளையாடி விட்டு வீடு திரும்புவது வழக்கம்.
என்னுடைய நண்பர்கள் அனைவருமே அரிஜன நண்பர்கள் தான். அவர்களோடு விளையாடிவிட்டு வீட்டிற்கு திரும்பியவுடன் என்னை என் தந்தை குளித்துவிட்டு வந்தால்தான் வீட்டிற்குள்ளேயே அனுமதிப்பார் இது தினமும் நடக்கும் விஷயமாகும். ஒரு முறை வழக்கம் போல் கபடி விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தேன் வாசலில் நின்று கொண்டு என் தந்தை குளித்துவிட்டு வா என்றார்கள். நான் புத்தக பையையும் சாப்பாட்டு சட்டியையும் வாசலிலேயே வைத்துவிட்டு குளிக்க சென்றவன் குளிக்காமல் திரும்பி வந்துவிட்டேன்.
என் தந்தை குளித்துவிட்டாயா என்று கேட்டார்கள். நான் இல்லையென்றேன். ஏன் குளிக்கவில்லை என கேட்டார்கள் அந்த கண்மாயில்(ஏரியில்) அரிஜன பையன் ஒருவன் குளிக்கின்றான் அதனால் நான் குளிக்கமாட்டேன் என்று சொன்னேன். புள்ளே தோளுக்கு மேலே வளந்துட்டாருல்ல அதனாலே அப்படித்தான் பேசுவாரு. பெரிய புத்தி சாலின்னு நெனப்பு. என்று கூறிக்கொண்டே சென்றுவிட்டார்கள். அன்று முதல் என்னிடம் எதுவுமே சொல்வதில்லை.

வேறொரு சம்பவம்


நான் படித்த பள்ளிக் கூடத்திற்கு பக்கத்தில் ஒரு பிராமண வீடு உள்ளது. என்னுடைய நண்பன் வீட்டார் தான் அந்த பிராமணர் வீட்டாரின் துணிகளையெல்லாம் துவைத்து கொடுப்பார்கள். அவ்வாரு துவைத்து கொண்டு வரும் துணிகளை வீட்டின் வாசலிலேயே வைத்துவிடவேண்டும். அந்த துணிகளை தண்ணீர் தெளித்து தான் வீட்டிற்குள் எடுத்து செல்லப்படும். இதுபோன்ற சம்பவங்களையெல்லாம் வெறுத்து ஒதுங்கியிருந்தது ஒரு கூட்டம் இப்படி செய்வதை புண்ணியமாக கருதியது ஒரு கூட்டம். நான் வெளி நாட்டிற்கு வந்த பிறகு ஒரு தி.க காரருடைய ஆடியோ கேஸட் ஒன்று கேட்க கிடைத்தது அதில் அவர் கூறுகின்றார் பிராமணர்கள் ஏன் மாட்டு மூத்திரத்தை குடிக்க கொடுக்கின்றார்கள் தெரியுமா? உனக்கு புத்தி வந்துவிட்டதா இல்லையா என்று மாட்டு மூத்திரத்தை குடிக்க கொடுத்து உன்னை பரிசோதிக்கின்றான். என்று கூறியது இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

இதோ சத்தியம் வந்தது

இஸ்லாத்தில் ஒருவரை கேலி செய்வதும் கண்ணியக் குறைவாக நடத்துவதும் அனுமதிக்கப்பட்டவையல்ல. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களது இரத்தமும், உங்களது உடமைகளும் மற்றும் உங்களது கண்ணியமும் வரம்பு மீறமுடியாதவைகளாகும். (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் : 2037 மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 1739).

இனப்பாகுபாடும் இஸ்லாத்தினால் அங்கீகரிக்கப்பட்டது இல்லை. இதைப் பற்றி இறைவன் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்: இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்: நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர்கள்; தான்: நிச்சயமாக அல்லாஹ், (யாவற்றையும்) நன்கறிந்தவன்: நன்குணர்பவன். (அல் குர்ஆன் 49-13).

இங்கே பயபக்தியுடையவர்கள் என்பவர்கள் யார் என்றால், எல்லாவித பாவச்செயல்களை விட்டும் ஒதுங்கியவராகவும், மேலும் தன் வாழ்வில் நல்லவற்றையே செய்து வருபவராகவும், இறைவன் தடுத்தவற்றிலிருந்து ஒதுங்கி இறைவனது பிரியத்திற்கு உரியவராக மாறுவதற்கு தன்னை அற்பணித்துக் கொண்டவர்கள் தான் இங்கே பயபக்தியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரை அவர் பிறந்த இனத்தைக் காரணம் காட்டி அவரை ஒதுக்குவதும், புறக்கணிப்பதும், அவரை அவமானச் சின்னமாகக் கருதுவதும், பொது இடங்களில் அத்தகையவர்களைக் கண்ணியக் குறைவாக நடத்துவதும், இனப் பாகுபாடு காட்டுவதும் இஸ்லாத்தினால் தடை செய்யப்பட்டவை அத்தகைய தடைக்காரணத்தைப் பற்றித் தான் மேலே நாம் கண்ட இறைவசனம் இவ்வாறு கூறுகின்றது, நீங்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்களே! உங்களிடையே நீங்கள் காணும் வேறுபாடுகள் யாவும் உங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டே அன்றி வேற்றுமை பாராட்டுவதற்கல்ல என்று கூறி இனப்பாகுபாடு, சாதியைக் காரணம் காட்டி இழிபிறப்பாக நினைத்தல் ஆகிய மனிதநேயத்தை கொன்றொழிக்கும் மாபாதகச் செயல்களிலிருந்து மனிதனை இஸ்லாம் பாதுகாக்கின்றது.

மேலும், தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு நாட்டையோ அவர் பெற்றிருக்கும் செல்வம், ஆட்சி, அல்லது குலத்திற்காக இஸ்லாம் முன்னிலைப்படுத்துவதில்லை. இறைவன் அனைவரையும் சமமான அளவில் தான் படைத்துள்ளான், அவர்களிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்கு அவர்கள் கொண்டுள்ள இறைநம்பிக்கையும், நற்செயல்களும் தான் காரணமாக அமைகின்றன. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஓ! மனிதர்களே! உங்கள் இறைவனும் ஒருவன் தான், உங்களது மூதாதையரும் (ஆதம்) ஒருவர் தான். ஒரு அரபியானவன் அரபி அல்லாதவனை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு அரபி அல்லாதவன் ஒரு அரபியை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு சிவந்த நிறத்தை உடையவன் கறுப்பு நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. ஒரு கறுப்பன் சிவந்த நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. மாறாக உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் : 22978).

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..!