Monday, September 12, 2005

ஒற்றுமைக்கு வழி!



கேள்வி : சத்திய இஸ்லாமை பரப்ப முன்வருபவர்களும் கூட சைத்தானின் 'கர்வ'க்கண்ணியில் சிக்கிக்கொள்வதேன்? நாங்களே சத்தியப்பாதையில் இருக்கிறோம் என்றே ஒவ்வொரு பிரிவும் உரிமைக் கொண்டாடினால் எங்களைப் போன்ற பாமரர்கள் எப்படி விளங்குவது? என் கருத்து ஆர்ப்பாட்டம் - ஆரவாரமின்றி (எந்த லேபிளும் ஒட்டிக்கொள்ளாமல்) - இயன்றவரை - குர்ஆன்-ஹதீஸ் படி நடப்பவர்களே - அந்த சரியான 73 ஆம் கூட்டத்தார்கள். உங்களின் உள்ளார்ந்த பதில்? (நான் இப்படி கேட்கக் காரணம்: அமைப்பிலுள்ளவர்கள் தம் தம் அமைப்புகளின் பெயருக்காக போராடும் அளவுக்குக்கூட - இஸ்லாத்திற்காக களம் காண்பதில்லையே..? பெயர் பெறுவதற்காகவே பெரும்பாலும் செயல்பாடுகள்?)


பொதுவாக அமைப்புகளோ, இயக்கங்களோ ஆரம்பிக்கப்படும் போது 'நிர்வாகத்திற்காக ஒரு லேபிள் தேவைப்படுகிறது. மற்றப்படி எந்த பிரிவினைக்காகவும் நாங்கள் தனிப் பெயரிடுவதில்லை' என்று தான் கூறி ஆரம்பிக்கிறார்கள். அமைப்போ, இயக்கமோ கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு நிர்வாகத்திற்காக என்று அவர்கள் சொன்ன லேபிளே அவர்களை தனித்து அடையாளம் காட்டி விடுகிறது. பிற்காலத்தில் அதுவே சமூகத்தை பிரித்து வைக்கவும் காரணமாகி விடுகிறது. ஒவ்வொரு இயக்கத்துடைய, அமைப்புடைய அறிஞர்கள் இதை உணர்ந்தாலும் என்னவோ தெரியவில்லை மீண்டும் அதிலேயே நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள்.

இயக்க வாதிகள் தங்கள் இயக்கத்தில் நின்றுதான் இஸ்லாத்தை பார்க்கிறார்களே தவிர இஸ்லாத்தில் நின்று இயக்கத்தைப் பார்ப்பதில்லை. இதன் விளைவு தங்கள் இயக்கமல்லாத பிற இயக்கங்கள் செய்யும் இஸ்லாமிய பணியை இவர்களால் அங்கீகரிக்க முடியாமல் போய் விடுகிறது. ஏதோ சில காரியங்களில் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தை அனுசரித்துப் போகிறதே தவிர ஒருங்கிணையும் முழுமையான மன நிலை அவர்களிடம் இல்லை என்பது உண்மைதான்.

1992 பாபர் மஸ்ஜித் தகர்;ந்த பிறகு தொடர்ந்து முஸ்லிம்கள் கடும் துன்பத்திற்கும் பிறரது அடக்கு முறைக்கும் ஆளாகி உயிரிழந்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக நடந்து முடிந்துள்ளது உயிரை உறைய வைக்கும் குஜராத் கலவரம். ஒவ்வொரு முறை முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போதும் இதே அறிஞர்கள் 'முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லாததுதான் இந்த கொடுமைகளுக்குக் காரணம். ஓரணியில் எல்லோரும் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயம். நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது' என்றெல்லாம் குரல் உயர்த்தி பேசியுள்ளார்கள். இப்படி பேசிய எவரும் தங்கள் இயக்கத்திலிருந்து இறங்கி இன்னொரு இயக்கத்தை அங்கீகரித்ததை பார்க்கவே முடியவில்லை.

ஆனால் புதிய இயக்கங்கள் துவங்கப்படுவதை மட்டும் பார்க்க முடிகிறது.

ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்காமல் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம் என்பதை நமக்கு நாமே முதலில் சொல்லிக் கொள்ளத் துவங்க வேண்டும். அப்போது தான் கொஞ்சக் காலத்திற்கு பிறகாவது இயக்க சிந்தனை மாறி ஓரணி என்ற லட்சியம் உயிரோட்டம் பெற துவங்கும்.

அடுத்து எங்களைப் போன்ற பாமரர்கள் என்ன செய்வது?.. என்று கேட்டு உங்களை நீங்களே பாமரராக அறிவித்துக் கொள்கிறீர்கள். ஒரு முஃமின் தன்னை தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்பது நபிமொழி (முஸ்லிம்) "பாமர மக்கள்" என்று ஒரு இனத்தை இறைவன் படைக்கவில்லை. இறைவனின் வழியில் முயற்சிக்காமல் போனால்தான் மனிதன் பாமரனாகிறான். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று ஒரு முஸ்லிம் சொல்லிக் கொள்ள வெட்கப்பட் வேண்டும்.

இறைவனுடைய இஸ்லாமிய மார்க்கத்தை கற்பது இதர எல்லா கல்வியையும் கற்பதைவிட மிக சுலபமானதாகும். ஏனெனில் இறைவன்,
'அவன் இந்த மார்க்கத்தில் உங்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை' என்கிறான். (அல் குர்ஆன் 22:78) சிரமமில்லை என்று கூறிவிட்ட பிறகு அதை சிரமமாக்கிக் கொள்வது யாருடைய தவறு..? இஸ்லாத்தை கற்க தனி கல்விமுறை எதுவுமில்லை. கற்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கான விடாமுயற்சியும் இருந்து இயங்கினால் மிக இலகுவாக மார்க்கத்தை கற்கலாம்.

எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ நிச்சயமாக நாம் அவர்களை நம்முடைய நேரான வழியில் செலுத்துவோம். (அல் குர்ஆன் 29:69) இறைவனின் இந்த வசனம் நீங்களும் அறிஞராகலாம் என்று தூண்டவில்லையா..!

அடுத்து இன்னார்தான் 73வது கூட்டத்தார் என்று எந்தக் கூட்டத்தையும் கூறவே முடியாது. ஏனெனில் 'இறைவா.. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக..' என்று இறைவன் பிரார்த்திக்க சொல்கிறான். (அல் குர்ஆன் 1:6 நாம் நேர்வழியில்தான் இருக்கிறோம் என்று ஒருவனுக்கு உறுதியாகி விட்டால் இந்த பிரார்த்தனை அழுத்தமில்லாமல் போய்விடும். ஏன், அர்த்தமில்லாமல் கூட போய்விடும். இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம் எவரும் நான் நேர்வழியை அடைந்து விட்டேன். 73வது கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. சொல்லிக் கொள்ளவே கூடாது.

குர்ஆனையும் குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் பின்பற்றிக் கொண்டு செல்லும் அதே வேளையில் நேர்வழிக்கான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். 73வது கூட்டம் எதுவென்று மறுமையில்தான் தெரியும்.


பிரிவினை பற்றி இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

'அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.' என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஸாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் - அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:

'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.' என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செயதி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபி' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'நான் ஒரு தேவ்பந்தி' என்றும் 'நான் ஒரு பெரல்வி' என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:

மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் - அதாவது அவர்கள் 'ஷாஃபியா' அல்லது 'ஹனஃபியா' அல்லது 'ஹம்பலியா' அல்லது 'மாலிக்கியா?' என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.

அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்து ஆல - இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:

எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ தவ்ஹீது ஜமாஅத் என்றோ ஜாக் என்றோ நஜாத் என்றோ சொல்லக் கூடாது.
அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்து ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றா

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் - நான் ஒரு முஸ்லிம் - என்று சொல்லுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.

இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.

மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ - வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.


நன்றி: இதுதான்இஸ்லாம்.காம்

5 comments:

Anonymous said...

தரமான ஆய்வு!

இன்றைய தினத்திற்கு மிகவும் அவசியமான, அழுத்தமான கருத்துக்கள்! பாராட்டுக்கள்.

Anonymous said...

good post!

பாபு said...

இது தான் இஸ்லாம்.காம் தள்த்திலிருந்து எடுத்துத் தரப்பட்ட கேள்வி பதிலுக்கு நன்றி.
அதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம்.

ஸாலிஹ்குலசை said...

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரரே!

தோஹாவின் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை கேட்போர் கூடத்தில், ஒற்றுமை என்னும் தலைப்பில் நாம் ஆற்றிய உரைக்காக சேகரிக்கப்பட்ட பல்வேறு குறிப்புகளில் சிலவற்றை இங்கே பதிந்ததன் காரணத்தினால் நன்றி நவிலும் குறிப்பு விடுபட்டுவிட்டது.

அதற்கான சுட்டி தற்போது சேர்க்கப்பட்டுவிட்டது.

Anonymous said...

Good post.it will be better when the believers follow it.The ideaology of islam is one but if you interpret in the ways which suits you it will only tranish image of ISLAM in the eyes of non belivers.